பிரித்வி ஷா-வைப் புகழ்ந்து தள்ளும் சச்சின் டெண்டுல்கர்


இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கே நான் தயாராகிவிட்டேன், ஆனால் எனக்கு மேற்கிந்தியத்தீவுகள் தொடருக்குத்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று அறிமுகப்போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர் பிரித்வி ஷா உற்சாகத்துடன் தெரிவித்தார்.

அதேசமயம், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஏராளமான தியாகங்கள் செய்த தந்தைக்கு தனது சதத்தை அர்ப்பணிப்பதாக பிரித்வி ஷா தெரிவித்தார்.

 

ராஜ்கோட்டில் இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான 18வயது நிரம்பிய பிரித்வி ஷா அறிமுக ஆட்டத்திலேயே அபாரமாகச் சதம் விளாசி 134 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

தனது சதம் அடித்த அனுபவம், போட்டிக்கு எவ்வாறு தயாராகினேன் என்பது குறித்து பிரித்வி ஷா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு என்னுடைய தந்தை ஏராளமான தியாகங்கள் செய்துள்ளார். அவருக்கு நான் என்னுடைய சதத்தை அர்ப்பணிக்கிறேன். இன்று களமிறங்கும்போது கூட, ரிலாக்ஸாக விளையாடு, கிரிக்கெட்டை ரசித்து விளையாடு என உற்சாகப்படுத்தினார்.

என்னைப் பொருத்தவரை எனக்கு இது அறிமுகப்போட்டியாகத் தெரியவில்லை. ஏனென்றால், நான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கே தயாராக இருந்ததால், இது பெரிதாகத் தெரியவில்லை. அப்போது எனக்கு வாய்ப்பு கொடுப்பார்கள் என எதிர்பார்த்தேன், கிடைக்கவில்லை, இப்போதுதான் கிடைத்திருக்கிறது. இங்கிலாந்தில் எனக்கு மிகச்சிறந்த அனுபவம் கிடைத்தது. மிகவும் வசதியாக உணர்ந்தேன்.

 

கேப்டன் விராட் கோலி என்னிடம் சீனியர்,ஜீனியர் வீரர் என்றெல்லாம் பார்க்காதே நண்பர்களாக அனைவருடன் பழகு என்று என் பயத்தை போக்கினார். களமிறங்கும் முன் சிறிது பதற்றம் இருந்தது, ஆனால், மூத்த வீரர்களிடம் பேசி எனது பயத்தை போக்கிக்கொண்டேன். ஒவ்வொருவரும் எனக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

தொடக்கத்தில் பேட் செய்தபோது பதற்றமாக இருந்தது, அதன்பின் களத்தில் நின்று விளையாடத் தொடங்கியபின், எனக்கு எளிதாக இருந்தது. கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களை அடக்கி ஆள்வது எனக்கு மிகவும் பிடிக்கும், அதைத்தான் இந்தப் போட்டியில் செய்தேன், மோசமான பந்துகள் வீசியபோது, தகுந்த தண்டனை கொடுத்து பவுண்டரிக்கு அனுப்பினேன்.

19வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் மற்றும் சர்வதேச கிரிக்கெட் ஆகியவற்றை ஒப்பிடும் போது ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. சர்வதேச கிரிக்கெட்டில் ஏராளமான நுணுக்கங்கள் இருக்கின்றன. அதிகமான உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியதால், எனக்கு வேகப்பந்துவீச்சின் நுணுக்கங்கள், வகைகளை அறிய முடிந்தது

இவ்வாறு பிரித்வி ஷா தெரிவித்தார்.


மே.இ.தீவுகளுக்கு எதிராக ராஜ்கோட்டில் அறிமுக போட்டியிலேயே சதம் கண்ட பிரித்வி ஷா கிரிக்கெட் பண்டிதர்களின் கவனத்தை தன் பேக்ஃபுட் பஞ்ச்கள் மூலம் கவர்ந்துள்ளார்.

இவரை முதன் முதலில் சச்சினுக்குக் காட்டியவர் சச்சின் நண்பர் ஜகதீஷ் சவான். ஒரு இளம் வீரர் இருக்கிறார், அவர் சச்சினைப் பார்க்க வேண்டும் என்கிறார் என்று சவான் கூற சச்சின் முதன் முதலாக பிரித்வி ஷாவின் ஆட்டத்தைப் பார்த்தவுடனேயே, பிரித்வி ஒருநாள் இந்தியாவுக்கு ஆடுவார், இவரிடம் அந்தத் திறமை தெரிகிறது என்று அப்போதே சச்சின் பாராட்டியுள்ளார்.

ராஜ்கோட்டில் தன் அறிமுக டெஸ்ட் சதம் மூலம் தீபங்களை ஏற்றிய பிரித்வி ஷாவுக்கு புகழாரங்கள் குவிந்து வருகின்றன. அவரது பேட்டிங் பலருக்கும் பல முன்னாள் வீரர்களை நினைவூட்டியிருக்கலாம்.

ஒரு சில ஷாட்க்ள் சேவாகை நினைவுபடுத்தின, ஒரு சில சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துமாறு அமைந்தன. சில கட் ஷாட்கள் ஜி.ஆர்.விஸ்வநாத்தை நினைவுபடுத்துவதாகவும் ஒரு சிலர் கருத இடமுண்டு.