மாநில நீச்சல் போட்டி - மதுரையில் 2 நாட்கள் நடக்கிறது


தமிழ்நாடு நீச்சல் சங்கம் சார்பில் 13-வது மாநில அளவிலான நீச்சல் போட்டி வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் மதுரை ரேஸ்கோர்ஸ் நீச்சல் குளத்தில் நடக்கிறது. இது குறித்து தமிழ்நாடு நீச்சல் சங்க செயலாளர் சந்திரசேகர் கூறுகையில், ‘தமிழ்நாட்டின் மையப் பகுதியாக மதுரை இருப்பதால் மாநில அளவிலான நீச்சல் போட்டியை இங்கு நடத்த தீர்மானித்தோம். நீச்சல் வீரர்கள் அனைவரும் இங்கு வந்து செல்ல வசதியாக இருக்கும். இதற்கு முன்பு 3 முறை மாநில நீச்சல் போட்டியை நடத்தும் வாய்ப்பை மதுரை நீச்சல் சங்கத்திற்கு வழங்கியிருந்தோம். 

இந்த போட்டி வயதின் அடிப்படையில் 8 பிரிவுகளாக 5 வயது முதல் 21 வயது வரையில் உள்ள நீச்சல் வீரர்களுக்கு நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கப்படும். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நீச்சல் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு தங்கும் வசதி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும்’ என்றார். அப்போது மதுரை மாவட்ட நீச்சல் சங்க தலைவர் ஸ்டாலின், செயலாளர் கண்ணன் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.