பேட்மின்டன் -, சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா, சாம்பியன்


மாநில சீனியர் பெண்கள் பேட்மின்டன் போட்டியில், சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா, சாம்பியன் பட்டம் வென்றார்.தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் ஆதரவுடன், கரூர் மாவட்ட பேட்மின்டன் சங்கம் சார்பில், மாநில சீனியர் பேட்மின்டன் போட்டி, கரூர் ஆபிசர்ஸ் கிளப்பில், சமீபத்தில் நடந்து முடிந்தது. சென்னை உட்பட, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா, 21 - 12, 21 - 16 புள்ளிக் கணக்கில், மதுரை, ஜெர்லின் அனிகாவை தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றார்.ஆண்கள் ஒற்றையரில், இந்திய அளவில் சாம்பியன் பட்டம் குவித்துள்ள, சென்னையை சேர்ந்த சங்கர் முத்துசாமியும், கோவை வீரர், சத்தீஸ்குமாரும் எதிர்கொண்டனர். இதில், 17 - 21, 21 - 10, 21 - 10 புள்ளிக் கணக்கில், சத்தீஸ்குமார் முதலிடமும், சங்கர் இரண்டாமிடமும் பிடித்தனர். போட்டியில், சிறந்த வீராங்கனையாக லட்சுமி பிரியங்காவும், வீரராக சங்கர் முத்துசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.