ஆசிய கோப்பை கால்பந்து 2019: சாதிக்குமா இந்தியா? 5-ஆம் தேதி தொடக்கம்


ஆசிய கோப்பை கால்பந்து 2019: சாதிக்குமா இந்தியா? 5-ஆம் தேதி தொடக்கம்


INDIAN-FOOTBALL

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2019-இல் இந்திய அணி சாதிக்குமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களால் விரும்பப்படும் ஆட்டமாக திகழ்கிறது கால்பந்து. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 300 கோடிக்கு மேற்பட்டோர் கண்டு களித்தனர் என்ற பிஃபாவின் ஆய்வறிக்கையே இதற்கு சான்றாகும். ஆசிய கண்டத்தில் பிரதான போட்டியாக
 ஏஎஃப்சி கோப்பை கால்பந்து போட்டிகள் உள்ளன. இதில் கோப்பை வெல்லும் அணி ஆசிய சாம்பியன் பட்டத்தையும், பிஃபா கன்பெடரேஷன்ஸ் கோப்பை போட்டிக்கும் தகுதி பெறும்.
 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியில் தென்கொரியா, ஈரான், சவுதி அரேபியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈராக், குவைத் போன்றவை பட்டங்களை தங்களுக்கு இடையே பகிர்ந்துகொண்டன. 2015-இல் நடைபெற்ற போட்டியில் மொத்தம் 16 அணிகளே பங்கேற்றன.
 ஜன. 5-இல் தொடக்கம்: அதே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் வரும் ஜனவரி 5-ஆம் தேதி முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை 17ஆவது ஏஎஃப்சி கோப்பை போட்டிகள் 4 நகரங்களில் 8 மைதானங்களில் நடக்கின்றன. இதில் மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதே போல் முதல் நான்கு மூன்றாம் இடம் பெறும் அணிகளும் நாக் அவுட் சுற்று (ரவுண்ட் 16) முன்னேறும்.
 6 குரூப் அணிகள்: குரூப் ஏ-இல் ஐக்கிய அரபு அமீரக நாடுகள், இந்தியா, தாய்லாந்து, பஹ்ரைன், குரூப் பி-இல் ஆஸ்திரேலியா, சிரியா, பாலஸ்தீனம், ஜோர்டான், குரூப் சி-இல் தென்கொரியா, சீனா, கிரிகிஸ்தான், பிலிப்பைன்ஸ், குரூப் டிஇல்-ஈரான், இராக், வியத்நாம், ஏமன், குரூப் ஈஇல் சவுதி அரேபியா, கத்தார், லெபனான், வடகொரியா, குரூப் எஃப்இல் ஜப்பான், உஸ்பெகிஸ்தான், ஓமன், துர்க்மேனிஸ்தான் நாடுகள் இடம் பெற்றுள்ளன.
 4-ஆவது முறையாக இந்தியா தகுதி: பிஃபா தரவரிசையில் இந்திய அணி 97-ஆவது இடத்தில் உள்ளது. இதற்கு முன்பு 1964, 1984, 2011 ஆண்டுகளில் தகுதி பெற்றது. அதன் பின் 8 ஆண்டுகள் கழித்து தற்போது தகுதி பெற்றுள்ளது. ஏ பிரிவில் முதலிரண்டு இடங்களில் இந்தியா இருந்தால் நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். வலிமையான பஹ்ரைன், போட்டியை நடத்தும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் உள்ளன. தாய்லாந்து வலுகுறைந்த அணியாகும்.
 முதலிடம் பெற்றால் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி பெறும்.
 தீவிர பயிற்சி: பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் பயிற்சியின் கீழ் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி தலைமையிலான அணி கடந்த ஓராண்டாகவே தீவிரமாக விளையாடி வருகிறது. ஆசியக் கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் சீனா, ஜோர்டான், ஓமன் உள்ளிட்ட அணிகளுடன் நட்பு ஆட்டங்களில் ஆடியது. தொடர்ந்து 11-க்கு மேற்பட்ட போட்டிகளில் வெற்றி மற்றும் டிரா கண்டு தோல்வியே காணாத அணியாகவும் திகழ்கிறது.
 நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுமா? இந்திய அணி கடந்த 1951, 1962 ஆசியப் போட்டி கால்பந்து தங்கப் பதக்கத்தையும், 1956 ஒலிம்பிக்கில் 4-ஆம் இடத்தையும் பெற்றிருந்தது. எனினும் காலப்போக்கில் கால்பந்து முக்கியத்துவம் இழந்து விட்டது. தற்போது மீண்டும் கால்பந்து விளையாட்டு இந்தியாவில் தனது இடத்தை பெற்று வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியன் சூப்பர் லீக், ஐ-லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2017-இல் பிஃபா 17 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையும் நடத்தப்பட்டது.
 இந்நிலையில் ஆசிய கோப்பை 2019-இல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி இந்தியா வரலாறு படைக்குமா என கால்பந்து ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
 அணி விவரம்: சுனில் சேத்ரி (கேப்டன்), கோல்கீப்பர்கள்-குர்ப்ரீத் சிங் சாந்து, அமிரிந்தர் சிங், விஷால் கைத், டிபன்டர்கள்-ப்ரிதம் கோதல், சர்தாக் கோலி, சந்தேஷ் ஜிங்கன், அனாஸ் எடதோடிகா, சலாம் ரஞ்சன் சிங், சுபாஷ் போஸ், நாராயண் தாஸ். மீட்பில்டர்கள்-உதாந்தா சிங், ரெளவ்லின் போர்ஜஸ், அனிருத் தாபா, வினித் ரேய், ஹாலிச்சரண் நர்சரி, ஆஷிக் குருனியன், ஜெர்மன்ப்ரீத் சிங், ஜாக்கிசந்த் சிங், பிரணாய் ஹைதர்.
 பார்வர்ட்-ஜிஜே லால்பெகுலா, சுமித் பாஸி, பல்வந்த் சிங்.
 -பா.சுஜித்குமார்.
 
 இந்திய அணி அட்டவணை
 ஜன.6, இந்தியா-தாய்லாந்து, அபுதாபி. (மாலை 5.30),
 ஜன. 10, இந்தியா-ஐக்கிய அரபு அமீரக நாடுகள்,
 அபுதாபி. (இரவு 8.00)
 ஜன. 14, இந்தியா-பஹ்ரைன், ஷார்ஜா . (இரவு 8.00).