விஐடியில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் இறகு பந்து போட்டி (Badminton) தோஹா நாட்டு தூதர் கொண்டி மணி தொடங்கி வைத்தார்.


விஐடியில் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் இறகு பந்து போட்டி (Badminton) தோஹா நாட்டு தூதர் கொண்டி மணி தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடைபெறும் தென்மண்டல அளவிலான பல்கலைகழகங்களுக்கு இடையேயான மகளிர் இறகு பந்து (Badminton) விளையாட்டு போட்டியை இந்தியாவிற்கான தோஹா நாட்டின் தூதர் கொண்டி மணி தொடங்கி வைத்தார். இதில் காமன்வெல்த் விளையாட்டு வாள்சண்டை போட்டியில் தங்க பதக்கம் பெற்ற சி.ஏ.பவானிதேவி கௌரவ விருந்தினராக பங்கேற்றார். இன்று தொடங்கிய தென்மண்டல அளவிலான மகளிருக்கான இந்த இறகு பந்து போட்டி (Badminton) 8ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 82 பல்கலைக்கழக அணிகளின் 400 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். போட்டிகள் தொடக்க விழா விஐடியில் இன்று தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி உடற்கல்வி இயக்குநர் முனைவர் என்.வி.தியாகசந்தன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மேற்கு ஆப்ரிக்கா நாடான தோஹா நாட்டின் இந்தியாவிற்கான தூதர் கொண்டி மணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து மகளிருக்கான இறகு பந்து போட்டியை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்திய நாடும் தோஹாவும் நல்ல உறவு வைத்துள்ளது. விஐடியில் இந்த இறகு பந்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி. இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்றுள்ள நீங்கள் உங்களின் திறமைகளை கையாண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார். நிகழ்ச்சியில் சிட்னியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் வாள் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை சி.ஏ.பவானி தேவி கௌரவ விருந்தினராக பங்கேற்று அகில இந்திய பல்கலைக்கழங்கள் விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்து பேசியதாவது: விஐடியில் நடைபெறும் மகளிருக்கான இறகு பந்து விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்றிருப்பது விளையாட்டு விரர் என்ற வகையில் எனக்கு பெருமையாக உள்ளது. இந்திய நாடு வாள் சண்டை போட்டியில் இன்று சிறப்பு பெற்று வருகின்றது. வாள் சண்டை வீரர்கள் தங்கள் திறமைகள மூலம் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். அதில் ஒருவராக நான் விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. விளையாட்டு போட்டிகளில் பெண்கள் ஜொலிப்பார்களாக என்ற எண்ணத்தை மாற்றி இன்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க குடும்பத்தினரும் சமுதாயமும் ஒத்துழைக்க வேண்டும். விளையாட்டில் நம்மால் சாதிக்க முடியும் என்ற எண்ணமும் குறிக்கோளும் அவசியம். அந்த குறிக்கோளுடன் தீவிரமான பயிற்சியில் நாள்தோறும் ஈடுபட்டால் நாம் வெற்றி பெற முடியும்.அதற்கு எடுத்து காட்டாக நான் விளங்குகின்றேன். விளையாட்டுக்காக அரசு நிதி வசதியும் பயிற்சிக்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன அதனை பயன்படுத்தி கடுமையான பயிற்சி மேற்கொண்டால் நாம் வெற்றி பெற முடியும் என்றார். இதில் விஐடி இணைத் துணைவேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் பங்கேற்று தென்மண்டல விளையாட்டு கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார் இதில் மாணவர் நலன் இயக்குநர் முனைவர் அமித் மஹிந்தர்கர் பங்கேற்றார். முடிவில் விஐடி விளையாட்டு பிரிவு செயலாளர் மாணவி தன்வி ஜி.பரீக் நன்றி தெரிவித்தார். இந்த தென்மண்டல இறகு பந்து விளையாட்டு போட்டியில் முதல் இடங்களை பெறும் அணிகள் அகில இந்திய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகின்றன.