ஒலிம்பிக்கில், நிச்சயம் தங்கம் வென்று, தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன் - தருண் அய்யாசாமி


Image may contain: 5 people, including Suresh Kumar, people smiling, beard and hat

ஆசிய தடகள போட்டியில், வெள்ளி வென்று, ஊர் திரும்பிய தருண் அய்யாசாமிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சமீபத்தில், இந்தோனேஷியாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீ., தடை தாண்டும் ஓட்டம் மற்றும் தொடர் ஓட்டத்தில், இந்திய வீரர் தருண் அய்யாசாமி, வெள்ளி பதக்கம் வென்றார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி, ராவுத்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த அவர், நேற்று காலை, தன் ஊருக்கு வந்தார்.

அவிநாசி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, பல்வேறு சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், ஊர் மக்கள், உற்சாக வரவேற்பளித்தனர்; தருணுக்கு, மலர் கிரீடம் சூட்டினர். பள்ளி மாணவர் குழுவினர், பாண்டு வாத்தியம் முழங்க வரவேற்றனர். அவிநாசி, லிங்கேஸ்வரர் கோவிலுக்கு, அவர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்; அங்கு, சாமி தரிசனம் செய்தார். அவிநாசியை சேர்ந்த, முகமது சுல்தான் என்பவர், தருணுக்கு தங்க மோதிரம் பரிசளித்தார்.

பின், சொந்த ஊரான, ராவுத்தம்பாளையம் கிராமத்துக்கு சென்றார். ஊர் எல்லையில், சுற்றுப்பகுதி கிராம மக்கள், மேள தாளம் முழங்க, வரவேற்பளித்தனர். அவிநாசி தாசில்தார், வாணிலட்சுமி ஜெகதாம்பாள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். கிராம இளைஞர்கள், 'கேக்' வெட்டி, தருணுக்கு, ஊட்டி மகிழ்ந்தனர்.

தருண் அய்யாசாமி கூறியதாவது: பதக்கம் வென்றது பெருமையளிக்கிறது. வரும் நாட்களில், போட்டிகளில் சிறப்பாக பங்கேற்பேன். என் திறமை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஒலிம்பிக்கில், நிச்சயம் தங்கம் வென்று, தாய் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.