ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்று ஈரோடு திரும்பிய மாணவிக்கு உற்சாக வரவேற்புஆசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்று ஈரோடு திரும்பிய மாணவிக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிய அளவிலான 19 வயதுக்கு உள்பட்ட மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீராங்கனைகளுக்கான தேர்வு முகாம் மகாராஷ்டிர மாநிலம், புணேவில் ஒரு மாதம் நடைபெற்றது. இதில், தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 23 பேர் கலந்துகொண்டனர். இந்திய அணிக்காக 12 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில், தமிழகம் சார்பில் சென்னை மாணவி ஜோதியும், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். கல்லூரியில் கணினி அறிவியல் மாணவி ஷாலினியும் தேர்வு செய்யப்பட்டனர். கோபி மாணவி ஷாலினி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஜூன் 10 ஆம் தேதி தொடங்கி 17 வரை வியட்நாமில் 19 ஆவது ஆசிய அளவிலான 19 வயதுக்கு உள்பட்டோருக்கான மகளிர் கூடைப்பந்துப் போட்டி நடைபெற்றது.
இதில், பங்கேற்று விளையாடிய இந்திய அணி கடுமையாகப் போராடி 11 ஆவது இடத்தை பிடித்தது. எனினும், கிராமத்தில் இருந்து இந்திய அணியில் இடம்பிடித்து, அணியின் கேப்டன் என்ற உயர்ந்த நிலையைப் பெற்று, ஆசிய போட்டியில் பங்கேற்று விளையாடி நாடு திரும்பிய மாணவி ஷாலினிக்கு ஈரோடு ரயில் நிலையத்தில் சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் நோயலின்ஜான், மாவட்ட தடகளச் சங்க நிர்வாகி கோவிந்தராஜன், பயிற்சியாளர்கள் செந்தில், ஆனந்த், கல்லூரி உடற்கல்வித் துறை பேராசிரியர் ஜமுனா ராணி உள்ளிட்டோர் ஷாலினிக்கு வரவேற்பளித்து அழைத்துச் சென்றனர்.