சதுரங்கம் விளையாட தெரிந்த குழந்தைகளை, ஆசிரியர்கள் தேடி வருகின்றனர்.


பள்ளி, வட்டார அளவிலான போட்டியில் பங்கேற்க தேவையான, சதுரங்கம் விளையாட தெரிந்த குழந்தைகளை, ஆசிரியர்கள் தேடி வருகின்றனர்.சமீபத்தில், விளையாட்டு விதிகளில் மாற்றம் கொண்டு வந்த தமிழக கல்வித்துறை, நடுநிலைப்பள்ளியில் படிக்கும் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரையும் போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
ஆர்வமுள்ளவர்களை பள்ளி, வட்டார, மண்டல அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பள்ளி விளையாட்டு வீரர்களை கண்டறிய, நேற்று முன்தினம் விண்ணப்பம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. இதனால், ஆறாம் வகுப்பு படிப்பவர்களில், சதுரங்கம் விளையாட தெரிந்தவர்கள் யார்? என்பதை கண்டறியும் பணியில் தலைமை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலர் ஆர்வமுடன் சதுரங்க போர்டு வாங்கி கொடுத்து, விளையாடவும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இது குறித்து, விளையாட்டுத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, 'சிறு பிள்ளைகளை நேரடியாக மைதானத்தில் விளையாட அனுமதிக்கும் போது, போட்டிகளில் விளையாட செய்யும் போது, அவர்கள் சோர்வடைய நிறைய வாய்ப்பு உள்ளது.எனவே, முதல்கட்டமாக, சதுரங்கம் போன்ற உள் அரங்க விளையாட்டுகளிலும், அடுத்தடுத்து பிற விளையாட்டிலும் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.