வேந்தர் கோப்பை கிரிக்கெட் சென்னை பல்கலை சாம்பியன்


வேந்தர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், சென்னை பல்கலை அணி, தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


சென்னை பல்கலை சார்பில், தமிழக பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான, வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டி, கிண்டி, அண்ணா பல்கலை வளாகத்தில், டிச., 26ம் தேதி துவங்கியது.சென்னை மற்றும் அண்ணா பல்கலை, அழகப்பா பல்கலை, அண்ணாமலை பல்கலை, பாரதியார், பாரதிதாசன், மதுரை காமராஜர் பல்கலை உட்பட, தமிழகத்தைச் சேர்ந்த, 16 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடின.


இதற்கு முன் நடந்த மூன்று போட்டிகளிலும், சென்னை பல்கலை அணி, வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சென்னை மற்றும் பாரதியார் பல்கலை அணிகள் மோதின.முதலில் களமிறங்கிய, சென்னை பல்கலை அணி, 20 ஓவர்களில், ஒன்பது விக்கெட் இழப்பிற்கு, 132 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய, பாரதியார் பல்கலை அணி, 20 ஒவர்களில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு, 116 ரன் எடுத்து, தோல்வியை தழுவியது.முதலிடம் பிடித்த, சென்னை பல்கலை அணிக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சாம்பியன் பட்டம் வழங்கினார்.