உலகக்கோப்பை பரிசுத்தொகை 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் . இறுதிப்போட்டியில் தோற்கும் அணிக்கு 190 கோடி ரூபாயும்


உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக 80 ஆயிரம் கோடி செலவிட்டுள்ள ரஷ்யா!
கடந்த வாரம் ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை  திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஒரு புறம் இது கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து கொண்டிருப்பதை போல, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் கோடி கோடியாய் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த முறை உலகக்கோப்பை பரிசுத்தொகை 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய்க்கு மேல் ஃபிஃபா அறிவித்துள்ளது. சென்ற முறை அறிவிக்கப்பட்ட 2 ஆயிரத்து 400 கோடி ரூபாயை விட 12 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இம்முறை கோப்பையை அடிக்கும் அணிக்கு கிட்டத்தட்ட 260 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. 

2015ம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்ற போது அவர்களுக்கு  68 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. இது கால்பந்து உலகக்கோப்பையில் குரூப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு கிடைக்க கூடிய பரிசுத்தொகைக்கு ஏறக்குறைய நிகரானது. 
உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்கும் அணிக்கு 190 கோடி ரூபாயும், மூன்றாவது இடத்தில் வரும் அணிக்கு 163 கோடி ரூபாயும் வழங்கப்படுகின்றன. அத்துடன் போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கும் குறைந்த பட்சமாக 54 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

போட்டியில் பங்கேற்கும் அணிகளை விட சிலரது பாக்கெட்டுகளில்  லட்சக்கணக்கான கோடிகளை நிரப்பிக்கொண்டிருக்கிறது.  
இந்த போட்டிகளின் நடத்துவதற்காக ரஷ்யா  செலவிட்ட மொத்த தொகை 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல். கடந்த முறை உலகக்கோப்பையை பிரேசில் நடத்தியபோது அந்நாட்டு அரசாங்கம் செலவிட்ட தொகை 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.  பிரேசில் செலவிட்டதை விட நான்கு மடங்கு அதிகமாக ரஷ்யா செலவிட்டுள்ளது. 

இந்த செலவுக்கான லாபத்தை ரஷ்யா உடனே அறுவடை செய்துவிடாது. வருகிற 2023ம் ஆண்டு தான் இதன் உண்மையான லாபத்தை ரஷ்யா ஈட்டக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். அப்போது அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு  ஒரு லட்சத்தி 55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் உயரும் என கூறப்படுகிறது. அதாவது உலகக்கோப்பைக்காக ரஷ்யா செலவிட்டதை விட இரண்டு மடங்கு லாபத்தை ஈட்டும். அடுத்ததாக கால்பந்து போட்டிகளை நடத்தும் ஃபிஃபா நிறுவனத்திற்கு இந்த போட்டிகளை நடத்துவதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது