கேரளா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி !!


கேரளா அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி !! 

கொச்சி, நவம்பர் 5:

கொச்சியில் இன்று நடைபெற்ற ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து போட்டியில் கேரளா அணியை அதன் சொந்த மண்ணில் 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

5வது சீசன் ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் 29 ஆவது கால்பந்து போட்டி    கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்  எஃப்சி அணிக்கும்  பெங்களூரு எஃப்சி அணிக்கும்   இடையே இன்று நடைபெற்றது. ஆட்டம் சரியாக 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு  அணி இடது புறத்தில் இருந்து ஆட்டத்தைத் தொடங்கியது.

இன்று விளையாடிய இரு அணிகளும் சம பலத்தில் இருந்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்கள் சுனில் மற்றும்   மிக்கு ஆகியோர் தங்களது  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதையடுத்து ஆட்டத்தின் 17 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின்  மிக்கு பந்தை எடுத்துக் கொடுக்க சுனில் அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டம் கடுமையாக மாறியது. கேரளா அணியினரும் சிறப்பாக விளையாடினார்.

இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் கேரளா அணியின் ஸ்லாவிஸ்லா ஒரு கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதியில் கேரளா மற்றும் பெங்களூரு அணிகள் 1- 1 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன.

இதையடுத்து இரண்டாவது பாதி தொடங்கப் போகும் நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் தொடங்க சற்று தாமதமானது.

ஆட்டத்தின் 49 ஆவது நிமிடத்தில்  கேரள அணியின் லால் ருத்தாராவுக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 66 ஆவது நிமிடத்தில்  பெங்களூரு அணியின் உதாண்டா சிங் வெளியேற்றப்பட்டு பெர்கூசன் களம் இறங்கினார்.

66 மற்றும் 68 ஆவது நிமிடத்தில் கேரளா அணியில் இரு வீரர்கள் மாற்றப்பட்டு புதிய வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். தொடர்நது இரு அணிகளிலும் புதிய வீரர்கள் களம் இறங்கினர். 

ஆட்டத்தின் 79 ஆவதுநிமிடத்தில் பெங்களூரு அணியின் ராபர்ட்டுக்கும், கேரள அணியின் வினீத்துக்கும் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.

பின்னர் ஆட்டத்தின்  81 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நிக்கோலா அற்புதமாக ஒரு கோல் அடித்தார். இதையடுத்து கூடுதலாக 5 நிமிடங்கள் வழங்கப்பட்டது. அப்போது இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

இதையடுத்து கேரள அணியை பெங்களூரு அணி 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.