தேசிய ஜூனியர் வளையப்பந்து - ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, தமிழகம் கைப்பற்றி அசத்தியது


தேசிய அளவிலான ஜூனியர் வளையப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, தமிழகம் கைப்பற்றி அசத்தியது.குஜராத் வளையப்பந்து சங்கம் சார்பில், தேசிய அளவிலான ஜூனியர் வளையப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி, குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில், 3ம் தேதி துவங்கியது. இதில், தமிழகம் உட்பட, 14 மாநிலங்களைச் சேர்ந்த, மொத்தம், 168 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர். தமிழகம் சார்பில், 12 பேர் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.இந்த போட்டியின் தனிநபர் பிரிவில் பங்கேற்ற வைரமுத்து; இரட்டையர் பிரிவில் பங்கேற்ற மோதீஷ்குமார் மற்றும் சூர்யா ஆகியோர் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினர். மகளிர் தனிப்பிரிவில் பங்கேற்ற ஷிவானி தங்கப் பதக்கத்தையும், புனிதா பிரியா வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர். இரட்டையர் பிரிவில் பங்கேற்ற தக்ஷிதா மற்றும் கீர்த்தனா; கலப்பு இரட்டையர் பிரிவில் பங்கேற்ற மீனா குமார் மற்றும் சுவேதா ஆகியோர், தங்கப் பதக்கம் வென்றனர்.அதேபோல, இருபாலர் பிரிவு மற்றும் குழு போட்டியில் பங்கேற்ற தமிழக அணி வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. குழு பிரிவில், தி.நகர், குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, பிளஸ் 2 மாணவியான மோனிஷா பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.ஒட்டுமொத்தமாக, ஆண்கள் பிரிவில் வைரமுத்துவும், மகளிர் பிரிவில் ஷிவானியும் முலிடத்தை பிடித்தனர். இறுதியில், இந்த போட்டியின் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை, தமிழக அணி கைப்பற்றியது.