1,682 மாணவர்கள் சேதுபந்தன ஆசனம்; யோகா கின்னஸ் சாதனை முயற்சி


புதுச்சேரியில் 25வது அகில உலக யோகா விழாவை முன்னிட்டு, வாழும் கலை நிறுவனம் சார்பில், 1,682 பள்ளி மாணவர்கள், சேதுபந்தன ஆசனம் செய்து, கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் சுற்றுலாத்துறை சார்பில், 25 வது ஆண்டு அகில உலக யோகா திருவிழா கடந்த 4ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இன்றுடன் (7ம் தேதி) விழா முடிகிறது. யோகா விழாவில், நாடு முழுவதிலும் இருந்து 1,288 கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். புதுச்சேரி சுற்றுலா துறையுடன், வாழும் கலை நிறுவனம் இணைந்து, கின்னஸ் சாதனை புரியும் நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில், புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் பயிலும், 1,692 மாணவ மாணவிகள் பங்கேற்று, ஒரே நேரத்தில், சேதுபந்தன ஆசனத்தை 3 நிமிடம் செய்து, கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'இந்த சாதனை முயற்சி, உடல் நலம், மன நலம் மற்றும் சுற்றுச்சூழல் துாய்மையின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையிலும், தன்னம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் தெளிவு அதிகரிக்க துணையாக இருக்கும். சாதனை முயற்சி பதிவுகள் கின்னஸ் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றனர்.