மாநில அளவிலான எறிபந்து போட்டி: கிருஷ்ணா வித்யாலயா பள்ளி சாதனை
பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான எறிபந்துப் போட்டியில் பொள்ளாச்சியை அடுத்த திவான்சாபுதூர் கிருஷ்ணா வித்யாலயா பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. 
பள்ளிக் கல்வித் துறை சார்பில் பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வால்பாறை, ஆனைமலை, கோட்டூர் சுற்றுப் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற அணிகள், சென்னை, தாம்பரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றன. இதில் திவான்சாபுதூர் கிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவிகள் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான எறிபந்துப் போட்டியில் பங்கேற்றனர். இறுதி ஆட்டத்தில்
சென்னை வேலம்மாள் பள்ளி அணியும், கிருஷ்ணா வித்யாலயா பள்ளி அணியும் மோதின.
இதில் வேலம்மாள் பள்ளி அணி வெற்றிபெற்றது. கிருஷ்ணா வித்யாலாய பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது.  இந்நிலையில்,  போட்டியில் இரண்டாமிடம் பிடித்த மாணவிகளை பள்ளியின் நிர்வாக இயக்குநர் கீர்த்தி கிரி, தாளாளர் கலையரசி, தலைமையாசிரியை முத்துலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர்  ஆசாத், தேவானந்த் ஆகியோர் பாராட்டினர்.