மாநில இறகுப்பந்து சாம்பியன்ஷிப்: கோவை வீரர், சென்னை வீராங்கனை சாம்பியன்
கரூர்: கரூரில் நடைபெற்ற மாநில சீனியர் இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கோவை வீரர் கே.சதீஸ்குமார், மகளிர் பிரிவில் சென்னை வீராங்கனை எஸ்.எஸ்.லட்சுமி பிரியங்கா சாம்பியன் ஆகினர்.
கரூர் ஆபீசர்ஸ் கிளப்பில் மாவட்ட இறகுப்பந்து கழகம் சார்பில் நடத்தப்பட்ட இப்போட்டி ஆக.29ஆம் தேதி தொடங்கியது. இதில், மாநிலம் முழுவதிலும் இருந்து 550 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியின் இறுதிச்சுற்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் கோவை வீரர் கே.சதீஸ்குமார் 17-21, 21-10, 21-10 என்ற செட்களில் சென்னை வீரர் எஸ்.எஸ்.சங்கர் முத்துசாமியை வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், காஞ்சிபுரம் அர்ஜூன் கிருஷ்ணன்-சென்னையின் வேலவன் ஜோடி 21-8, 21-11 என்ற செட்களில் கோவையின் லோகேஷ் விஸ்வநாதன்-பி.நவீன் ஜோடியை வென்றது.
மகளிர் ஒற்றையரில் சென்னையின் எஸ்.எஸ்.லட்சுமி பிரியங்கா 21-12, 21-6 என்ற செட்களில் மதுரையின் ஜெர்லின்அனிகாவை வீழ்த்தினார். 
மகளிர் இரட்டையர் பிரிவில் சென்னையின் வி.நிலா-மதுரையின் வர்ஷினி ஜோடி, 21-13, 15-21, 24-22 என்ற செட்களில் சென்னையின் ரம்யா துளசி-காஞ்சிபுரத்தின் தனுஸ்ரீ ஜோடியை வென்றது. 
கலப்பு இரட்டையரில் கோவையின் லோகேஷ் விஸ்வநாதன்-காஞ்சிபுரத்தின் தனுஸ்ரீ ஜோடி, 21-23, 21-14, 21-14 என்ற நேர் செட்களில் திருவள்ளூரின் செந்தில்வேல்-சென்னையின் நிலா இணையை வீழ்த்தினர்.
பின்னர் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவுக்கு மாவட்ட இறகுப்பந்து கழகத் தலைவர் ம.சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் என்.அருண் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன், போட்டிகளில் வென்றவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான பரிசு, கோப்பைகளை வழங்கினார். 
மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், தமிழ்நாடு இறகுப்பந்து கழக பொதுச் செயலாளர் அருணாசலம், டிஎன்பிஎல் ஆலை மேலாளர் பி.பட்டாபிராமன், கரூர் வைஸ்யா வங்கி துணை பொதுமேலாளர் எஸ்.லட்சுமணன், மாவட்ட இறகுப்பந்து கழக பொருளாளர் பி.ராஜசேகர், இணைச் செயலாளர் எம்.செல்வன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். முடிவில், துணைத்தலைவர் என்.பாஸ்கரன் நன்றி கூறினார்.