5 வயதில் பெற்றோரால் கைவிடப்பட்டு அனாதையான சிறுமி, பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் வென்று அசத்திக்கொண்டிருக்கிறார்


5 வயதில் பெற்றோரால் கைவிடப்பட்டு அனாதையான சிறுமி, பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் வென்று அசத்திக்கொண்டிருக்கிறார். சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் தகுதியையும் பெற்றிருக்கிறார். அவரது பெயர் சாலு. 23 வயதாகும் இவர் வாய் பேச முடியாதவர். ஐந்து வயதில் பெற்றோரை பிரிந்து அனாதையாக சுற்றித்திருந்திருக்கிறார். அவரை போலீசார் மீட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள அனாதை இல்லத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அவரை தொண்டு நிறுவனம் ஒன்றில் தன்னார்வலராக பணிபுரிந்த பத்மினி ஸ்ரீனிவாசவா என்ற பெண்மணி வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்.

சாலுவிடம் இருந்த தனித்திறமைகளை கண்டறிந்து பளுதூக்கும் பயிற்சி அளித்து பதக்கங்கள் குவிக்கும் வீராங்கனையாக உருமாற்றி விட்டார். 2015-ம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே சாலு பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றிருக்கிறார். அதே உத்வேகத்துடன் துபாயில் வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்க இருக்கும் சிறப்பு ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டிருக்கிறார்.

24 வகையான விளையாட்டு பிரிவுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். சாலுவை பளுதூக்கும் வீராங்கனையாக உருமாற்றியது பற்றி பத்மினி சொல்கிறார்:

‘‘5 வயதில் சாலுவை போலீசார் மீட்டு எங்களிடம் ஒப்படைத்தார்கள். அவள் அழுது கொண்டே இருந்தாள். அவளுடைய பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. அவளால் பேசமுடியாது என்பதால் அவளை பற்றி போதுமான தகவல்களை திரட்ட முடியாமல் போய்விட்டது. அவள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சமயத்தில் நானும், கணவரும் அறக்கட்டளை சார்பாக வெளி இடங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்தோம். அதனால் எங்களுடனேயே அவளை அழைத்து சென்று கொண்டிருந்தோம்.

அவள் எப்போதும் அமைதியாகவே இருந்தாள். என்னுடனேயே இருந்ததால் அவளை பற்றி ஓரளவு புரிந்து கொள்ள தொடங்கினேன். அவளுக்கு தடகளத்தில் ஆர்வம் இருப்பதை புரிந்து கொண்டு பயிற்சி அளித்தோம். பளு தூக்குவதற்கு அதிக ஆர்வம் காட்டியதால் அதற்கான பயிற்சி வழங்கினோம். ஆனால் சில மாதங்களில் அவள் கவனம் கால்பந்து மீது திரும்பியது. அதற்கும் பயிற்சி அளித்தோம். ஆனால் சில மாதங்களிலேயே மீண்டும் பளு தூக்கும் பயிற்சிக்கு மாறினாள். தீவிர பயிற்சி மேற்கொண்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கமும் வாங்க தொடங்கிவிட்டாள். அடுத்த மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று மீண்டும் பதக்கம் வாங்குவதற்கு கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறாள்’’ என்கிறார்.