முதுமையை சந்தோஷமாக எதிர்கொள்ளமுதுமையை சந்தோஷமாக எதிர்கொள்ள ஆலோசனை கூறும், முதியோர் நல மருத்துவர், வி.எஸ்.நடராசன்: முதுமை காலத்தில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய், தைராய்டு பிரச்னைகள், ரத்த சோகை, பித்தப்பையில் கற்கள் போன்ற பல பிரச்னைகள் உருவாகிக் கொண்டிருக்கும். ஆண்டுக்கு ஒரு முறையாவது, முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். வயது ஆக ஆக, பசியும், ருசியும் குறையும். புரதச் சத்து அதிகமுள்ள பருப்பு வகைகள், சிறுதானிய வகைகள், குறைந்தது, 2 லி., முதல் 2.5 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.அதேபோல், எண்ணெய் வகைகள், அரிசி மற்றும் அதிக உப்பு சார்ந்த பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும். அத்துடன், தவறாமல் ஏதாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். தியானம் நல்லது. நம் மனதையும், உடலையும் வலுவாக வைத்திருத்தல் வேண்டும். காலை மற்றும் மாலையில் நடைப் பயிற்சி மேற்கொள்ளுதல் அவசியம்.இப்போதெல்லாம் வைட்டமின், 'டி' குறைபாட்டால், நோய்கள் அதிகம் வருகின்றன. தினமும் சிறிது நேரம் வெயிலில் நடப்பது நல்லது. வயது ஆகும்போது பிரச்னைகளும் அதிகமாகும்; அதனால் மருந்துகளும், மாத்திரைகளும் அதிகம் எடுக்க நேரிடும். அதற்கு மாறாக, குறைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.ஒரு சிலர் உணவுக்கு நிகராக மருந்துகளையும் எடுத்துக் கொள்கின்றனர்; அது நல்லதல்ல; முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் நமக்கு நாமே மருத்துவராக இருக்கக் கூடாது. மருத்துவர் ஆலோசனை இல்லாமல், மருந்துக் கடையில் மருந்து வாங்கிச் சாப்பிடக் கூடாது. நம் வாழ்வை வளமாக்க, நல்ல சிந்தனைகளை, நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல், எந்த நோயும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், எந்தவித நோயையும் அலட்சியப்படுத்தக் கூடாது.முடிந்தவரை, நம் மனதை சோர்வடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதற்கு எந்த நபர் மீதும், பொருள் மீதும் பற்று வைக்கக் கூடாது. உறவும், நட்பும் தான் நம்மை வாழ்நாள் முழுவதும் இயக்கிக் கொண்டிருக்கிறது. அவர்களை அறவே ஒதுக்க முடியாது. அதேசமயம் அவர்களுடன் அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத குழப்பங்களை, மனதில் போட்டுக் கொள்ள வேண்டாம். முக்கியமாக, மரண பயம் கூடவே கூடாது. பிறப்பவர் ஒருநாள் இறக்கத் தான் போகிறார். விதி யாரையும் விட்டு வைக்கப் போவதில்லை.

ஒரு சிலர், சிறிய நோய்க்குக் கூட, மறுநாளே மரணித்து விடுவோமோ என்று அஞ்சுவர். வேறு சிலர், பல பெரிய நோய்களோடு, 90 வயதைத் தாண்டி வாழும் வரலாறுகள் இருக்கின்றன. அதனால், எந்த சூழ்நிலையிலும், நம் மரணத்தைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது. நாம் வாழும் ஒவ்வொரு நாளும், நமக்கு வரப்பிரசாதம். அதை நிம்மதியாக சந்தோஷமாக வாழ்வோமே!