102 வயது தடகள வீராங்கனை


கைநிறைய பதக்கங்களோடு காட்சி தரும் மான் கௌருக்கு (Mann Kaur) வயது 102. 'சண்டீகரின் அதிசயம்' எனப் போற்றப்படும் இவர், தனது 93வது வயதில்தான், விளையாட்டுத் துறையில் கால் பதித்தார். 
2011இல், அவரது மகன் குருதேவ் (வயது 78), தன் தாய் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பதைக் கண்டு, விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடத் தூண்டினார். இதைத்தொடர்ந்து அந்த ஆண்டில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, நீளம் தாண்டுதலில் வெள்ளி, 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கங்களை வென்றார் மான்.
அமெரிக்காவின் வான்கூவர் நகரில் 2016இல் நடைபெற்ற, முதியோர் விளையாட்டுப் போட்டிகளில் 100மீ. ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றார் மான் கௌர். 100 மீ. தூரத்தை 1 நிமிடம் 21 நொடிகளில் கடந்து, அந்தப் பிரிவில் உலக சாதனை படைத்தார்.
தொடர்ந்து, 2017இல் நியூசிலாந்தில் நடைபெற்ற, முதியோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் (World Masters Games) 100 மீ. ஓட்டப் பிரிவில் பங்கேற்றார். அந்தப் போட்டியில் அவர் மட்டுமே பங்கேற்றார். வேறு போட்டியாளர்களே இல்லை. எனினும், தனது முந்தைய சாதனையை முறியடித்து 1 நிமிடம் 14 நொடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார்.
'வெற்றி என்பது வேறு யாரையும் வெல்வது அல்ல. தொடர் பயிற்சியும், கற்றலையும் கொண்டு தனது சாதனைகளைத் தானே முறியடித்து முன்னேறுவதுதான்' என்பதே மான் கௌரிடம் நாம் கற்க வேண்டிய பாடம்.