துப்பாக்கி ஏந்திய காவலர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்?


ம ணிகண்டன் என்ற ஆயுதப்படை காவலர் இரண்டு நாட்களுக்கு முன்னால் தற்கொலை செய்துகொண்டார். எதிரிகளை சுடுவதற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் அவரையே சுட்டு மாய்த்துக்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன் பெண் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சி பெரிய விவாதத்திற்கு உள்ளாகி, உண்மையில் என்னதான் நடந்தது என்று அனைவரும் வினவிய நிலையில், அந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஆண்டுக்கு உலகில் 10 லட்சம் நபர்களும், இந்தியாவில் 1 லட்சத்து 35 ஆயிரம் நபர்களும், தற்கொலை செய்துகொள்கிறார்கள். மாணவர் தற்கொலை விகிதம் இந்தியாவில் அதிகம். 9 ஆயிரத்து 474 மாணவர்கள் சென்ற ஆண்டு தற்கொலை செய்துள்ளனர். சென்ற ஆண்டு உலகில் தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 34 சதவீதம் பேர் இந்திய நாட்டு பெண்களாகவே இருக்கிறார்கள் என்பது மிகவும் வருத்தம் தருவதாக இருக்கிறது. ஏழ்மை நிலை, இளம் வயதில் திருமணம், கணவன் கொடுமை, வரதட்சணை, நோய் போன்றவை அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று தோன்றுகிறது. இவர்களது நிலை நமக்கு புரிகிறது. ஆனால் மாதந்தோறும் அரசு சம்பளம் வாங்கும், உடல் உறுதியும் மன உறுதியும் உள்ள துப்பாக்கி ஏந்திய காவலர் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? ராணுவ வீரர்கள் ஏன் தற்கொலை செய்ய வேண்டும்? அதற்கு பலபல காரணங்கள் இருக்கக்கூடும்.

மேலதிகாரிகள் ‘டார்சர்’ என்ற குற்றச்சாட்டு உடனடியாக எழுப்பப்பட்டாலும் அது உண்மைதானா என்பது விசாரணையில் தான் தெரியவரும். தகப்பனாரிடம் திருமணம் பற்றிய பேச்சில் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதும், திருமணம் செய்ய நினைத்த பெண்ணை கரம் பிடிக்க முடியாததும் தற்கொலை செய்ய காரணமாக இருந்திருக்கின்றன. ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதற்காக அவர் மீது தவறில்லை என்ற முடிவிற்கு வந்துவிட முடியாது. சரியாக பணிக்கு வருவதில்லை, பொய்யான தகவல் தந்து விடுப்பில் சென்று விடுவது, எந்த வேலையும் செய்யாமல் இருப்பது போன்ற செயல்களால் மேலதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும் இவர்களே காரணமாகிவிடுகிறார்கள்.

வேலைக்கு சேரும் முன் ஒருவரின் மனநிலை, நேர்மைக்குணம், குணாதிசயங்கள் ஆகியவற்றை மனோதத்துவ தேர்வு மூலம் பரிசோதித்து வேலைக்கு அமர்த்தினால் தற்கொலை மனநிலை உள்ளவர்கள் அரசு பணியில் சேர்வதை தவிர்க்க முடியும். தற்கொலை செய்யும் மனநிலை ஒரு சிலருக்கு மரபணுவில் இருக்கிறது என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இறந்தவரின் குடும்பத்தில் கூட சிலர் தற்கொலை செய்திருப்பார்கள். ஆனால் அப்படி பாரம்பரிய சரித்திரம் இருக்கும் அனைவரும் தற்கொலை செய்துகொள்வதில்லை. சூழ்நிலைகளும், சில உடனடி நிகழ்வுகளும் தற்கொலைக்கு காரணமாக இருந்துவிடுகின்றன.

சில முக்கிய காரணங்கள் இவை. காதல் தோல்வி, கடன் தொல்லை, தீராத நோய், நெருக்கமான நபர் இறந்துவிட்டது, போதைப்பழக்கம், முயற்சியில் தோல்வி, அவமானப்பட்டது இப்படியாக எது காரணமாக இருந்தாலும், மனிதனின் மன அழுத்தம் தற்கொலை செய்ய வழிவகுக்கிறது. தப்பு செய்துவிட்டேன், நான் ஒரு பயனற்றவன் என்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்படுகிறது. இதிலிருந்து அவரால் மீள முடியவில்லை. இறப்புதான் இந்த துயரத்திற்கு ஒரே முடிவு என்ற மனநிலைக்கு வருகிறார்.

அந்த மனமுடைந்த தருணத்தில் எது கையில் கிடைக்கிறதோ அதை பயன்படுத்தி தற்கொலை செய்கிறார்கள். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் துப்பட்டாவில் தொங்குகிறார்கள் அல்லது தீவைத்துக்கொள்கிறார்கள். விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தங்களது மரணத்தை உறுதி செய்கிறார். ரெயில்வே பாதைக்கு அருகில் உள்ளவர் ரெயில் தண்டவாளத்தில் தலை வைக்கிறார். முன்னொரு காலத்தில் ‘பாலிடால்’ என்ற பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து மனிதர்கள் இறந்ததால், அதை முற்றிலுமாக தடை செய்தது அரசு. தங்களது உயிரை தாங்களே எடுக்கத் துணிந்தவர், மனிதபிறவி எவ்வளவு அரியது என்பதை உணர வேண்டும். ஒரு குழந்தை உலகில் பிறப்பதற்கான வாய்ப்பு மூவாயிரம் பில்லியன்களில் ஒன்று என்று ஆராய்ச்சி கூறுகிறது. சுமார் 360 கோடி ஆண்டுகள் பரிணாமவளர்ச்சியில் உருவானது தான் மனிதனின் உடலில் இருக்கும் மரபணு. அந்த மரபணுவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கு உயிர் வாழ வேண்டும். தற்கொலை செய்த மணிகண்டனுக்கு திருமணம் ஆகவில்லை. அவரது மரபணு இந்த பூமியில் இதோடு நின்றுவிட்டது.

ஒரு விஷயத்தில் தோல்வி என்றாலும் இன்னும் பல விஷயங்களில் வெற்றி பெற முடியும். ஐ.ஏ.எஸ். தேர்வில் தோல்வியுற்ற ஒருவர் என்னிடம் வந்து “வாழ்க்கை வெறுத்துவிட்டது, எனக்கு இனி எதுவுமில்லை தற்கொலை செய்யப்போகிறேன்” என்றார். உன்னை அம்மா நேசிக்கிறாரா? என்று கேட்டேன், ஆம் என்றார். நண்பர்கள் நேசிக்கிறார்களா? ஆம் என்றார். இன்னும் வயது இருக்கிறதா ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத? என்று கேட்டேன் ஆம் என்றார். “பிறகு உங்களுக்கு வாழ்வில் என்னதான் இல்லை, எல்லாமே இருக்கிறது” என்று கூறினேன். அவரும் “நான் இழக்காத செல்வம் பல இன்னும் இருக்கிறது, முடிவை மாற்றிக்கொள்கிறேன் சார்” என்றார்.

பெற்றோர்கள் குழந்தைகளை ‘நீ பயனற்றவன், நீ உருப்படமாட்டாய்’ என்ற மோசமான வார்த்தைகளில் திட்டுவது குழந்தையின் நம்பிக்கையை வளர்க்காது. அரசு அதிகாரிகள் கூட தங்களது கீழ் பணி செய்யும் அதிகாரிகளின் நம்பிக்கை தளரும்படியான எந்த வார்த்தைகளையும் பயன்படுத்தக்கூடாது. மனதிற்கு பிடிக்காத ஊழியரை திட்டமிட்டு இம்சிப்பதும் கூடாது. இந்த கொடூர மனநிலை உயர் அதிகாரிகளிடம் இல்லாமல் இல்லை. தங்களை மிகவும் ‘ஸ்ட்ரிக்ட்’ ஆனவர் என்று பிறர் பேசவேண்டும் என்ற காரணத்திற்காகவே செயற்கையாக தண்டனைகள் தரும் கொடுமை மனப்பான்மை உள்ளவர்களையும் பார்க்கிறோம். அரசாங்கம் என்பது நல்ல அறிவும், பண்பும் உள்ள, பயிற்சி பெற்ற மக்களால் ஆளப்பட வேண்டும் என்று பிளேட்டோ சொன்னார். அதன்படிதான் இன்று உலக அளவில் அரசு பணி தோன்றியிருக்கிறது. உயர் அதிகாரிகள் கீழ் பணியாளர்களின் தாயாகவும், தந்தையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் பிளேட்டோ கண்ட அரசாட்சியின் தத்துவம். கருணை என்பது இங்கு மிக மிக அவசியம். அதிகாரம் படைத்தவர்கள் கருணைகாட்ட விதிகளில் தாராளமாக இடம் இருக்கிறது.

இன்று தற்கொலைகளை தடுக்க, மன அழுத்தத்தைப் போக்க, தமிழ்நாடு காவல்துறையும், தமிழ்நாடு அரசும் தேசிய மனநல மற்றும் நரம்பியல் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து காவலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பயிற்சி ஒன்றை நடத்தி வருகிறது. இந்த நல்வாழ்வு பயிற்சி பயனுள்ளதாக இருக்கிறது. இந்த பயிற்சியின் விளைவாக காவல்துறையில் தற்கொலைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முனைவர் செ.சைலேந்திரபாபு, காவல்துறை கூடுதல் இயக்குநர்.

 

நேற்று மாலை திருச்சி பெண்கள் சிறை வார்டன் இளம் காவலர் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தமிழ் செல்வி.

ஆயுதப்படை காவலரான இவர் திருச்சி பெண்கள் சிறையில் வார்டனாக பணிபுரிந்து வந்தார்.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் இளம் காவலர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திராணியற்று தற்கொலை முடிவை நாடுவது அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படவேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.

தற்கொலை செய்து கொள்வது எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல என மன நல மருத்துவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

தமிழக காவல் துறையில் போலீஸார் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது. குறிப்பாக சென்னையில் போலீஸாரின் தற்கொலை மரணங்கள் அதிகரித்துள்ளன. 2016-ல் பரங்கிமலை ஆயுதப்படை பிரிவில் கோபிநாத் என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்தாண்டு மார்ச் மாதம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அருண்ராஜ் (27) என்ற ஆயுதப்படை காவலர் அதே பாணியில் துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார். அதே மாதத்தில் அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஸ் குமாரும் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். தொடர்ந்து கொருக்குப்பேட்டை சிறப்பு எஸ்ஐ ஜோசப், கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் காவலர் பாலமுருகன் அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இப்படி தமிழகம் முழுவதும் 2008 முதல் 2017 வரை 295 போலீஸார் பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தமிழகத்தில்தான் போலீஸார் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 27 போலீஸார் தற்கொலை செய்து கொள்வதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. போலீஸாரின் தற்கொலைக்கு மன அழுத்தம், மன இறுக்கம், வேலைப் பளு, அதிகாரிகளின் அழுத்தம், உடல் நலக்குறைவு உட்படபல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இதுகுறித்து கீழ்பாக்கம் மனநல மருத்துவமனை முன்னாள் இயக்குநர் சத்தியநாதன் கூறியதாவது:சொந்த மாவட்டத்தில் பணியமர்த்தாமல் வேறு மாவட்டத்தில் பணியமர்த்துதல், பணி மாறுதலால் குடும்பத்தினரை பிரிந்து இருந்தல், முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத விரக்தி, பிற துறைகளுக்கு இணையான சம்பளம் வழங்காமை, உயர் அதிகாரிகளின் தொந்தரவு உட்பட 8 காரணங்கள் போலீஸாரின் மன அழுத்தத்துக்கு காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. எனவே பிரச்சினை என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மனச் சோர்வு ஏற்பட்டால் நமது நலன் விரும்பிகளிடம் வெளிப்படையாக பேச வேண்டும். கவலை எல்லோருக்கும் உள்ளது. அதை புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதிக அளவு தற்கொலை எண்ணத்துக்கு தள்ளப்படுகின்றனர். வெற்றி - தோல்வி இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருமுடிவுக்கு வரும் முன் நம்மை பெற்றவர்களையும் உடன் பிறந்தவர்களையும் நம்மை சார்ந்தவர்களையும் ஒரு முறை நினைத்து பார்த்தால் தற்கொலை முடிவு வெற்றி பெறாது என்றார்.