இந்திய கால்பந்தின் இளம் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்-முகமது லியாகத்


  

 

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த முகமது லியாகத்திற்கு 14 வயதுதான் ஆகிறது. இருப்பினும் அவர் இந்திய கால்பந்தின் இளம் நட்சத்திரமாக ஜொலிக்கிறார். கால்பந்து விளையாட்டை தன்னுடைய உயிர்மூச்சாக சுவாசித்துக்கொண்டிருக்கும் லியாகத், சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 16 வயதிற்குட்பட்டோருக்கான உலக கால்பந்து போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி அசத்தியிருக்கிறார். மேலும் சென்னையின் எப்.சி. அணியின், 15 வயதிற்குட்பட்டோருக்கான அணியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான கால்பந்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வரும் லியாகத்தை சந்தித்தோம். அவர் கால்பந்து விளையாட ஆரம்பித்தது முதல், இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்தது வரை அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

கால்பந்து விளையாட்டில் நீங்கள் எப்படி?

சிறுவயதில் நான் ஜிம்னாஸ்டிக் வீரராக பயிற்சி பெற்றேன். உடல் வழக்கத்தை விட நன்றாக வளைந்ததால், கால்பந்தை வேகமாக உதைக்க முடிந்தது. அதனால் கால்பந்தாட்ட பயிற்சிகளை முறைப்படி பயின்று, பள்ளி அணியில் விளையாட ஆரம்பித்தேன்.

கிரிக்கெட் ரசிகர்கள் நிறைந்த ஊரில், கால் பந்தாட்ட பயிற்சி மேற்கொண்டது எப்படி?

கால்பந்தாட்ட பயிற்சியில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால், ஜிம்னாஸ்டிக் பயிற்சியில் இருந்து மெதுவாக விலக ஆரம்பித்தேன். கால்பந்தாட்ட விளையாட்டில் முழுவதுமாக ஐக்கியமானதும், என் மனதை மாற்ற முயன்றனர். ‘கால்பந்து ஏன் விளையாடுகிறாய்?, அதில் என்ன வளர்ச்சி இருக்க போகிறது, கால்பந்திற்கு பதிலாக கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை விளையாடு’ என பலரும் பலவிதமாக பேசி, மனதை கலைக்க பார்த்தனர். இருப்பினும் நான் கால்பந்து உதைப்பதை விடுவதாக இல்லை. அந்தசமயத்தில்தான் சென்னையின் எப்.சி. அணி உதயமானது. என்னுடைய கால்பந்து கனவையும் நனவாக்கியது.

சென்னையின் எப்.சி. கால்பந்து அணியில் நீங்கள் இணைந்த கதையை கூறுங்கள்?

அது 2014-ம் ஆண்டு. அப்போதுதான் சென்னையின் எப்.சி. அணி புதிதாக பிறந்திருந்தது. அந்த ஆண்டு சென்னையின் எப்.சி. அணி, ஐ.எஸ்.எல்.போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், அடுத்த சீசனுக்காக வீரர்களை தயார்படுத்திக் கொண்டிருந்தது. அதேசமயம் தமிழ்நாட்டின் தலைசிறந்த, இளம் கால்பந்தாட்ட வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சிகளையும் வழங்கினர். அதில் ஒருவனாக நானும் தேர்வாகி, சென்னையின் எப்.சி. அணியில் பயிற்சி பெற்றேன். சென்னையின் எப்.சி. கிளப்பின் அப்போதைய பயிற்சியாளர்களான ஆல்ட்ராய்ட், சக்தி, கணேஷ் பிரபு ஆகியோரின் வழிகாட்டுதல், என்னை சிறப்பாக விளையாட வைத்தது. மேலும் ெசன்ைனயின் எப்.சி. அணியின் இளைஞர் வளர்ச்சி தலைவர் சபீர் பாட்ஷா வழங்கிய வாய்ப்பினை பயன்படுத்தி, 2017-ம் ஆண்டு நடந்த 13 வயதிற்குட்பட்டோருக்கான ஐ-லீக் போட்டியில் சிறப்பாக விளையாடினேன். அந்த லீக் போட்டியில் மொத்தம் 23 கோல்களை அடித்திருந்தேன். இதற்கு பரிசாக, அதிக கோல் அடித்தவர் பட்டியலில் தேசிய அளவில் 3-வது இடமும், தமிழக அளவில் முதல் இடமும் கிடைத்தது. கால்பந்து அரங்கில் தேசிய அளவிலான அங்கீகாரமும் கிடைத்தது.

இந்திய கால்பந்து அணிக்கு அழைக்கப்பட்டதை பற்றி கூறுங்கள்?

சென்னையின் எப்.சி. கிளப்பில் பயிற்சி, அடிக்கடி லீக் போட்டிகள், ஈரோடு மாவட்ட அணிக்காக விளையாடுவது, பள்ளிப்படிப்பு என வாழ்க்கை வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் 2018-ம் ஆண்டின் இறுதியில், தமிழ்நாடு கால்பந்து கழகமும், அகில இந்திய கால்பந்து கழகமும் இணைந்து சென்னை நேரு பூங்காவில் தேசிய அளவிலான தேர்வு முகாமை நடத்தியது. அதில் தமிழகம் சார்பாக மொத்தம் 460 மாணவர்கள் கலந்து கொண்டனர். இருப்பினும் தேசிய அணியில் பயிற்சி பெற 5 வீரர்களுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. அவர்களுள் ஒருவனாக நானும் தேர்வாகினேன். தமிழகத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் தேர்வானவர்களை ஒடிசா மாநிலத்திற்கு அழைத்து சென்று, அங்கு தீவிர பயிற்சி வழங்கினர். பயிற்சியின் பிடி நாளுக்கு நாள் இறுகி கொண்டே சென்றதால், அதை தாக்குபிடிக்க முடியாமல் சில வீரர்கள் ஓட்டம்பிடித்தனர். பலரை பயிற்சியாளர்களே வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். பயிற்சியின் முடிவில் வெறும் 32 வீரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தோம். அதில் தமிழகத்தை சேர்ந்தவன், நான் மட்டுமே. இதில் சிறப்பாக விளையாடிய 23 வீரர்களை, ‘ஐ-லீக்’ போட்டியில் விளையாட வைத்ததோடு, ஐக்கிய அமீரகத்தில் நடந்த 16 வயதிற்குட்பட்டோருக்கான உலக கால்பந்து போட்டிக்கும் அனுப்பி வைத்தனர்.

இந்திய அணியில் விளையாடிய அனுபவம் எப்படி இருந்தது?

இந்தியாவில் கால்பந்து விளையாடியதற்கும், இந்தியாவிற்காக அமீரகத்தில் கால்பந்து விளையாடியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. பெரும்பாலான அணிகள் ‘தடுப்பாட்டம்’ என்பதை மறந்துவிட்டு, அதிரடியாக விளையாடினார்கள். அதிரடியினால் எதிரணியினரை கலங்கடிப்பதுதான் அவர்களின் குறிக்கோளாக இருந்தது. மேலும் உலக கால்பந்தாட்ட வீரர்களின் அனுபவ உரைகளையும், அவர்களது பயிற்சி நுணுக்கங்களையும் பெற முடிந்தது.

கால்பந்து வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடங்களை கூறுங்கள்?

ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு கிளம்பும் முன்பு வரை இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா..? கிடைக்காதா? என்பதே பெரும் குழப்பமாக இருந்தது. ஏனெனில் இந்திய அணிக்காக தேர்வான 23 வீரர்களில் நான் மட்டுமே இளையவன். அதனால் இறுதி அணி அறிவிக்கப்படும் வரை படபடப்பாகவே இருந்தது. இதை பெற்றோரிடம் அழுது புலம்ப, அவர்கள் பயிற்சி நடைபெற்ற புவனேஸ்வர் பகுதிக்கு கிளம்பி வந்துவிட்டனர். அவர்கள் புவனேஸ்வருக்கு வந்து இறங்கவும், நான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பறக்கவும் நேரம் சரியாக இருந்தது. ஆனால் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட சில நிமிடங்களில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. பெற்றோரின் ஆறுதல் கிடைத்த அதே நேரத்தில், இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பும் கிட்டியது. அதனால் மகிழ்ச்சியாக அமீரகத்திற்கு பறந்தேன்.

உங்களது எதிர்கால திட்டம் என்ன?

தமிழ்நாட்டிற்காகவும், சென்னையின் எப்.சி. அணிக்காகவும் சிறப்பாக விளையாடி, இந்திய கால்பந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பதுதான் என்னுடைய லட்சியம். அதற்காகவே இரவு பகல் பாராமல் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். வெகு விரைவிலேயே சாதித்து காட்டுவேன்.

கால்பந்து விளையாட்டில், உங்களை கை தூக்கி விட்டவர்களுக்கு எத்தகைய நன்றிக்கடன் செலுத்த இருக்கிறீர்கள்?

நான் ஆரம்பத்தில் ஆசான் மெமோரியல் பள்ளியில் படித்தேன். அங்குதான் கால்பந்தாட்ட ஆர்வம் ஏற்பட்டது என்றாலும், சேத்துபட்டு சர் முத்தா பள்ளிதான் என்னை முழு கால்பந்தாட்ட வீரனாக மாற்றியது. அங்குதான் கால்பந்தை முழுமையாக கற்றுக்கொண்டு, திறமையான கால்பந்தாட்ட வீரனாக உருமாறினேன். அந்த பள்ளியில் இருந்துதான் சென்னையின் எப்.சி. அணிக்கு தேர்வாகினேன். அங்கு கிடைத்த பயிற்சியும், அந்த அணியின் இளைஞர் வளர்ச்சி தலைவர் சபீர் பாட்ஷாவின் வழிகாட்டுதலும், தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் ஊக்கமும் என்னை வளர்த்தெடுக்க, இந்திய அணியில் இடம்பிடித்தேன்.

இப்படி நான் செலுத்த வேண்டிய நன்றி கடன் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இவை அனைத்தையும் இந்திய கால்பந்தாட்ட வீரனாக முன்னேறி, கோல் மழையினால் வட்டியும், முதலுமாக செலுத்த இருக்கிறேன். அதைவிட சிறப்பான நன்றி கடன் வேறு எதுவும் இருக்காது என்கிறார்.

தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் லியாகத், பொது தேர்வு நெருங்கி கொண்டிருக்கும் வேளையிலும் கால்பந்தாட்டத்துக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறார். இருப்பினும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள், இவர் படிப்பிலும் சுட்டி என்பதை உணர்த்துகிறது. லியாகத்தின் படிப்பு விஷயங்களை அவரது அம்மா ரிஸ்வானா கவனத்தில் கொள்ள, அப்பா அகமத் விளையாட்டு பயிற்சிகளை கவனித்து கொள்கிறார். இவருக்கு கபீர் என்ற தம்பியும் உள்ளார். அவரும் கால்பந்தாட்ட வீரரே. ‘தமிழ்நாடு பேபி லீக்’ போட்டிகளில் இளம் வீரராக களம் கண்டிருக்கிறார்.