மாணவர்களை, குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்.


'ஓடிவிளையாடு பாப்பா' பாடலில் 'மாலைமுழுதும் விளையாட்டு' என்றான் பாரதி. ஒரு காலத்தில் அப்படி விளையாடிக்கொண்டிருந்த நம் பிள்ளைகள் இன்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மனத்திற்கும் உடலுக்கும் உற்சாகம் தருபவைதான் விளையாட்டு. இப்பருவத்தில் விளையாடாவிட்டால் வேறு எப்போது விளையாடுவது? இங்கே மாணவர்களிடம், 'விளையாட பெற்றோர் அனுமதிக்கிறார்களா?' என்ற கேள்வியை எழுப்பி இருந்தோம். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, கணவாய்ப்பட்டி 'பர்ஸ்ட் ஸ்டெப் பப்ளிக் சி.பி.எஸ்.இ., பள்ளி' மாணவர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர். 

ரா. சுபிக் ஷா: (8ஆம் வகுப்பு)
நான் விளையாட என் பெற்றோர் வாய்ப்புக் கொடுக்கிறார்கள். ஆனால், துணைக்கு ஆள் கிடைப்பது இல்லை. 'பல்லாங்குழி' மாதிரியான விளையாட்டை இன்னொருவர் இல்லாமல் விளையாட முடியாது. எல்லோர் வீட்டிலும் விளையாட அனுமதிக்க வேண்டும்.

ச. மீனலோசினி: (8ஆம் வகுப்பு)
வீட்டில் அப்பா, அம்மாவுடன் விளையாடுவேன். அது மனத்திற்கு மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கும். விளையாடுவதால் எல்லோரும் புத்துணர்ச்சி பெறமுடியும்.

பா.ஷர்மிளா: (9ம் வகுப்பு)
அனுமதிக்கின்றனர். ஆனால், முந்தைய காலம்போல இயற்கையோடு இயைந்திருந்த விளையாட்டுகள் இப்போது இல்லை. தற்போது அனைத்தும் செயற்கைத் தனமாக மாறிவிட்டது.

சு. கோகுல்: (9ம் வகுப்பு)
பெரும்பாலான பெற்றோர் விளையாட அனுமதிப்பதில்லை. விளையாட்டால் கிடைக்கும் நன்மைகள் பற்றிப் பலரும் அறிவதில்லை. இதனால் எல்லா விளையாட்டுகளிலும் உருவாகவேண்டிய சிறந்த வீரர்களை நாடு இழந்துகொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

ஞா. சூரிய அஸ்வத்தன்: (9ம் வகுப்பு)
வெளியில் விளையாட அனுமதிப்பதில்லை. வீடியோ கேம், மொபைலோடு விளையாட மட்டுமே அனுமதிக்கின்றனர். இதைப் படிக்கும் நீங்களாவது, மாணவர்களை, குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்.

எஸ். கோபி: (9ம் வகுப்பு)
எனக்கு கூடைப்பந்து விளையாடப் பிடிக்கும். ஆனால், அடிபட்டுவிடுமே என்ற என் மீதான அதீத அக்கறையால் பெற்றோர் அனுமதிப்பதில்லை. விளையாட்டின் அருமை தெரிந்தும், அனுமதி மறுக்கின்றனர். முன்பெல்லாம் சேற்றிலும், சகதியிலும் விளையாடியுள்ளனர். அந்த வாய்ப்பெல்லாம் எங்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.