உலக வெப்ப மயமாதலால் சுட்டெரிக்கப்போகிற சூரியனிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி கண் எதிரே தோன்றவில்லை.


உ லகின் பெரிய அண்ணன் என்று தன்னை கருதிக்கொண்டிருக்கிற அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தையும் இன்று ஒரு சேர கதிகலங்க வைத்து கொண்டிருக்கும் வார்த்தைகள் இரண்டு. ஒன்று, ‘டெரரிசம்’ என்று அழைக்கப்படுகிற பயங்கரவாதம். இன்னொன்று ‘குளோபல் வார்மிங்’ என்று சொல்லப்படுகிற உலக வெப்பமயமாதல்.

அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத தடுப்பு போர், உலக நாடுகளின் கூட்டு நடவடிக்கை காரணமாக உயிர்களைப் பறிக்கிற பயங்கரவாதம் கூட இப்போது ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மனித உயிர்களுக்கு மட்டுமல்ல, உலகின் அத்தனை ஜீவராசிகளுக்கும் இன்றைக்கு ஆபத்தாக உருவெடுத்து வருகிற உலக வெப்ப மயமாதலை கட்டுக்குள் கொண்டு வர ஒரு வழி தெரியாமல்தான் உலக நாடுகள் அனைத்தும் திணறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பான ஆலோசனைகளில் உலக நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோடை காலம் இன்னும் தொடங்கவில்லை. பிப்ரவரி மாதம்தான் பிறந்திருக்கிறது. அதற்குள் தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், சேலம் உள்ளிட்ட நகரங்களை வெயில் வறுத்தெடுக்கத் தொடங்கி இருக்கிறது அல்லவா? இதெல்லாம் உலக வெப்பமயமாதலின் ஒரு அங்கம்தான்.

இந்தநிலையில் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள். என்ன குண்டு அது? உலகளவில் பருவநிலையை கணக்கிடத் தொடங்கிய காலக்கட்டம் என்றால் அது 1850-ம் ஆண்டு. அந்த காலக்கட்டத்தில் இருந்து 150 ஆண்டுகளுக்கு மேலாக வெப்ப நிலை பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் இல்லாத அளவுக்கு வெப்பம், இப்போது நம்மை வாட்டி வதைக்கப் போகிறது, சூரியன் நம்மை சுட்டெரிக்கப்போகிறான் என்பதுதான் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தூக்கிப்போட்டிருக்கும் குண்டு.

அடுத்த 5 ஆண்டுகளில் வெப்ப நிலை தொழில்புரட்சி காலத்தில் இருந்ததை விட 1 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேலாக கடந்து செல்லும் என்று கணித்திருக்கிறார்கள்.

2014-ம் ஆண்டு தொடங்கி 2023-ம் ஆண்டு வரையிலான தசாப்தத்தில் (10 ஆண்டுகள்) இரண்டாவது பாதியில் நாம் நுழைந்திருக்கிறோம். இது உச்ச வெப்ப நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிற கால கட்டமாம். முதலில் 2015-ம் ஆண்டுதான் உலகளாவிய வெப்ப நிலை, ‘பிரி இண்டஸ்டிரியல்’ என்று சொல்லப்படுகிற தொழில் புரட்சிக்கு முந்தைய கால கட்டத்தில் (1850-1900) நிலவிய வெப்ப நிலையை விட 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகி இருக்கிறது. அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய சராசரி வெப்ப நிலை 1 டிகிரி செல்சியஸ் கூடிக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது தொடரும் என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள். இதுபற்றி பேராசிரியர் ஆதம் ஸ்கெய்பே என்ற வானிலை ஆராய்ச்சியாளர் பி.பி.சி. நிறுவனத்துக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “இப்போது 2023-ம் ஆண்டு வரை வெப்ப நிலை இப்படி இருக்கும் என்று கணித்திருக்கிறோம். அதையும் தாண்டி வெப்ப நிலை அதிரடியாக உயரத்தான் வாய்ப்பு இருக்கிறது” என்று சொல்லி இருக்கிறார்.

பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு பற்றி பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஒரு மனதாக எடுத்த முடிவு, தொழில் புரட்சிக்கு முந்தைய கால கட்டத்தில் (1850-1900) இருந்த வெப்ப நிலையை விட குறைந்தது 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப நிலையை குறைத்தாக வேண்டும், அதற்கான நடவடிக்கையை உலக நாடுகள் எடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இதில் உலக நாடுகள் எந்தளவுக்கு ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் அது கேள்விக்குறிதான். அவர்கள் ஒத்துழைத்தால் அவர்களின் தொழில் துறை வளர்ச்சி பாதிக்கும். பொருளாதார வளர்ச்சி தடைப்படும். இதனால்தான் உலகளாவிய வெப்ப மயமாதலை கட்டுப்படுத்துவதில் முன்னேறிய நாடுகள் பலவும் பாராமுகம் காட்டுகின்றன. இந்தநிலையில், கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. சபை விஞ்ஞானிகள் ஒன்றரை டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை கூடினால் ஏற்படும் தாக்கங்கள் பற்றிய சிறப்பு ஆய்வறிக்கையை வெளியிட்டார்கள். அதில், இன்றைய உலகத்தை நாம் தக்க வைக்க வேண்டுமானால் கார்பன் பயன்பாட்டை குறைத்தாக வேண்டும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

ஏனெனில் இந்த 2019-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரையில் வெப்ப நிலையானது தொழில் புரட்சிக்கு முந்தைய கால கட்டத்தில் நிலவிய வெப்ப நிலையை விட சராசரியாக 1.03 டிகிரி செல்சியஸ்சிலிருந்து 1.57 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றனவாம். இப்படி வெப்ப நிலை கூடிக்கொண்டே போனால் என்னாவது என்ற கவலை எழுகிறது அல்லவா?

உலக வானிலை ஆய்வு அமைப்பை சேர்ந்த விஞ்ஞானி பெட்டரரி டாலாஸ் சொல்வது, “2018-ம் ஆண்டே, வெப்ப நிலை அதிகரிப்பு உலகின் பல நாடுகளை, கோடானு கோடி மக்களை பாதித்து இருக்கிறது. பொருளாதாரம், சுற்றுச்சூழலில் இது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நாம் இப்போது எதிர்கொள்ள வேண்டிய ஒரு உண்மை, பசுமைகுடில் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைத்துக் கொள்ள வேண்டும், பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்” என்கிறார்.

பசுமை குடில் வாயுக்கள் என்பது என்ன என்றால் நீராவி, கார்பன்டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, குளோரோபுளோரா கார்பன், ஹைட்ரோ புளோரா கார்பன் போன்றவை. இவைதான் பூமியின் வெப்பத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவை மட்டும் இன்று இல்லாவிட்டால், பூமியின் வெப்ப நிலை குறைந்தபட்சம் 33 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவாக இருக்குமாம்.

இப்போது என்ன செய்வது?

உலக வெப்ப மயமாதலால் சுட்டெரிக்கப்போகிற சூரியனிடம் இருந்து உங்களைக் காத்துக்கொள்ள தற்காப்பு நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி கண் எதிரே தோன்றவில்லை.

தினமும் காலை, இரவு என இரு முறை குளியுங்கள். தினமும் 3 லிட்டர் குளிர்ந்த தண்ணீர் குடியுங்கள். மண்பானை தண்ணீர் மகத்துவமானது. வெளியே எங்கு சென்றாலும் கையில் தண்ணீர் பாட்டில் இருக்கட்டும். சமயம் வாய்க்கிறபோதெல்லாம் கைக்குட்டையில் தண்ணீர் ஊற்றி முகத்தில் ஒற்றிக் கொள்ளுங்கள். பழங்கள் அதிகமாக சாப்பிடுங்கள். பாட்டில் குளிர்பானங்களுக்கு பதிலாக புத்தம் புதிய பழச்சாறு, இளநீர், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி தாகம் தீர்க்கும். அசைவ உணவுகள், கார உணவுகளை விலக்குங்கள். 100 சதவீத பருத்தி உடைகளையே அணியுங்கள். அட, இப்படியெல்லாம் செய்தால் சூரியன் நம்மை சுட்டெரிக்காமல் விட்டு விடுவானா என்று கேட்காதீர்கள். இதெல்லாம் நாம் கடும் பசியில் வாடுகிறபோது ஒரு ரொட்டித்துண்டு இடைக்கால நிவாரணமாக அமையுமே, அதுபோலத்தான்!

- இலஞ்சியன்