உறவுகளை மேம்படுத்த ஒரு விளையாட்டு


உறவு முறையை உயிராக மதிக்கும் பண்பாடு தமிழர்களின் பாரம்பரியத்தில் ஊறிப்போனது. குடும்ப விழா, திருவிழா என எதுவானாலும் உறவுகளுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அந்த வரிசையில் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டிலும் உறவுக்கு முன்னுரிமை அளிக்கும் வழக்கத்தை ஒரு கிராம மக்கள் பின்பற்றி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள விராலிபட்டி கிராமம் தான் அது. உறவுகள் பங்கேற்கும் வீர விளையாட்டு பற்றி தெரிந்துகொள்வதற்காக அந்த கிராமத்திற்குள் அடியெடுத்துவைத்தோம்.

அங்கு பொங்கல் பண்டிகையையொட்டி கழு மரம் ஏறும் வீரவிளையாட்டு நடத்தப்படுகிறது. மாட்டுப்பொங்கல் நாளில் மேற்கு வீட்டு பங்காளிகள் எனும் குடும்பத்தினர் ஊர் பொதுமந்தையில் வழுக்குமரம் ஏறும் போட்டியை நடத்துகின்றனர். இதில் அவர்களின் உறவுமுறைகளை சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்காக 30 அடி உயரம் கொண்ட மரத்தை வெட்டி கொண்டு வருகின்றனர். அதன் மேல்பட்டையை நீக்கிவிட்டு முழுவதும் வழுவழுப்பாக்கி விடுகின்றனர். அது போதாது என்று ஆமணக்கு எண்ணெய்யை ஊற்றி, கையால் பிடிக்க முடியாத அளவு வழுக்கும்தன்மைக்கு மாற்றி விடுகின்றனர். பின்னர் வழுக்கு மரத்தின் உச்சியில் பரிசுத் தொகையாக ரூ.5,001 பண முடிப்பு கட்டி தொங்கவிடப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கழுமரம் ஏறும் நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த கழுமரம் ஏறும் நிகழ்ச்சியில் மாமன், மருமகன், மைத்துனர், அண்ணன், தம்பி என்ற உறவுகள் கோதாவில் குதிக்கின்றனர். உறவினர்கள் ஒன்று கூடினால் அந்த இடம் களைகட்ட தானே செய்யும்.

கட்டிளம் காளையர்கள் முதல் 50 வயதை கடந்தவர்களும் மல்லுக்கட்டுவதற்கு குவிந்து விடுகின்றனர். இது வீரத்தை வெளிக்காட்டும் விளையாட்டாக இருந்தாலும், உறவினர்களுக்கு இடையே உறவு பாலம் அமைக்கும் போட்டியாகவே திகழ்கிறது. எனவே, கீழே விழுந்தாலும் அடிபடாமல் இருப்பதற்காக வழுக்கு மரத்தை சுற்றிலும் செம்மண்ணை கொட்டி குவித்து வைக்கின்றனர். அதேபோல் வழுக்கு மரத்தின் உச்சிக்கு சென்று விடாமல் இருப்பதற்காக தண்ணீரை ஊற்றுவதற்கு டேங்கர் லாரி, குடம் மற்றும் இதர பாத்திரங்களுடன் உறவுக்காரர்கள் காத்திருக்கின்றனர்.

வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சி தொடங்குகிறது. எண்ணெய் ஊற்றிய வழுக்குமரத்தில் போட்டி போட்டு ஏறுகின்றனர். உடனே அவர்கள் மீது உறவினர்கள் தண்ணீரை ஊற்றுகின்றனர். இதனால் மாமா மீது மருமகன் வழுக்கி விழுவதும், அண்ணனை தம்பி முந்துவதும் அதை கண்டு உறவினர்கள் கேலி செய்வதும் என மகிழ்ச்சி வெள்ளம் பீறிடுகிறது. மேலும் வழுக்கி விழும் நபர்கள் மீது தண்ணீர் ஊற்றுவதால் உடல் முழுவதும் செம்மண் சகதியுடன் எழும்போது இளைஞர்கள், முறைப்பெண்களின் கிண்டலில் இருந்து தப்பிக்க முடியாமல் வெட்கத்துடன் நெளிவதை பார்க்க கூட்டமே உற்சாகமாக மாறி விடுகிறது.

வழுக்கு மரத்துடன் பல மணி நேரம் மல்லுக்கட்டி தோற்றாலும், யாரும் சோர்வடைவது இல்லை. உறவின் வலிமையே ஒன்று சேர்ந்து வெல்வதில் தானே இருக்கிறது. அதற்காக தானே அந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆம், 3 மணி நேரத்துக்கு மேலாக நீயா, நானா? என்று போட்டியிட்டு மல்லுக் கட்டிய அனைவரும் இறுதியில் ஒன்று சேருகிறார்கள்.

கைகளை கோர்த்தபடி வளையம் போன்று கழுமரத்தை சுற்றிலும் அமைத்து, ஒருவர் மீது ஒருவர் ஏறி செல்கின்றனர். அந்த உறவு சங்கிலியை உடைக்க மீண்டும் தண்ணீர் ஊற்றப்படுகிறது. ஆனால், மாமா பிடிச்சிக்கோ, மச்சான் விட்டுடாதே என உற்சாகமூட்டும் குரல்கள் ஒலிக்கின்றன. மச்சானும், மாமாவும் மேலே இருக்கிறார்கள், தம்பி சரிந்து விடாமல் பிடித்துக்கொள் என்று உறவு முறையை கூறி உஷார்படுத்துகிறார்கள்.

உறவுகளின் கைகள் ஒன்று சேர, வழுக்குமரத்தின் உச்சியை எட்டி பிடித்து, பண முடிப்பை எடுத்து வெற்றி பெறுகிறார்கள். உடனே, அதுவரை தொந்தரவு செய்வதற்காக தண்ணீரை ஊற்றிய உறவினர்கள் மெய்மறந்து உறவு வென்றதை நினைத்து பூரிப்புடன் கைதட்டி ஆர்ப்பரிக்கின்றனர். அதுவே வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சியின் வெற்றி என்று ஊர் மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.

பண முடிப்பை போட்டியில் பங்கேற்ற அனைவரும் சரிசமமாக பிரித்து கொள்வது மற்றொரு சிறப்பு அம்சம். உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி உறவுக்கு முக்கியம் அளித்து நடத்தும் வழுக்கு மரம் நிகழ்ச்சி நிறைவு பெற்றாலும், மந்தையை விட்டு செல்ல மனமில்லாமல் கூட்டம் கலைகிறது. வீட்டை நோக்கி கால்கள் நடந்தாலும், வழுக்கு மர நிகழ்ச்சியை மனத்திரையில் ஓடவிட்டப்படி நீங்கா நினைவுடன் திரும்புகின்றனர். உறவுகள் கூடி கொண்டாடும் அந்த திருநாளுக்கு இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே? எனும் ஏக்கம் அனைவரின் மனதிலும் இருப்பதை உணர முடிகிறது.

உறவுகளை உறுதிப்படுத்தும் இத்தகைய விளையாட்டுகள் பெருகட்டும்!

 

உறவினர்களுக்குள் நடக்கும் இந்த வித்தியாசமான விளையாட்டு பற்றி, விராலிப்பட்டியை சேர்ந்த பிரபு கூறுகையில்..

‘‘நான் விராலிப்பட்டியில் உள்ள அக்கம்மாள் கோவிலில் பூசாரியாக உள்ளேன். இங்கு ஆன்மிகத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இப்படி ஒரு புதிய விளையாட்டை ஆரம்பித்து, கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இந்த போட்டியில் எங்களின் மாமன்மார்கள், மச்சான்மார்கள், மருமகன்மார்கள் மட்டுமே பங்குபெறுவார்கள். வழுக்கு மரம் ஏறும்போது அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி விளையாடுவோம். அப்போது அவர்கள் வழுக்கி விழுந்து, செம்மண் சகதியில் அலங்கோலமாக நிற்பதை பார்த்து அனைவரும் கேலி செய்வோம். உடனே அவர்கள் வீராப்புடன் மீண்டும் வழுக்குமரத்தில் ஏறி மறுபடியும் விழுவார்கள். அதை பார்க்க, பார்க்க சிரிப்பாக இருக்கும். எத்தகைய பிரச்சினையாக இருந்தாலும் அவற்றை மறந்து அனைவரும் ஒன்று கூடும் திருவிழாவாகவே வழுக்குமரம் ஏறும் போட்டியை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

ரமேஷ் கூறுகையில், ‘‘விராலிப்பட்டி வழுக்கு மரம் ஏறும் போட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பிரபலம். அதனால் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே உறவினர்களுக்கு வழுக்கு மரம் போட்டி விவரத்தை தெரிவித்து விடுவோம். எந்த வேலையாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு அனைவரும் விராலிப்பட்டி வந்து விடுவார்கள். எவ்வளவு நேரம் போட்டி நடந்தாலும், மக்கள் சலிக்காமல் பார்த்து கொண்டிருப்பார்கள். இந்த ஆண்டு வழுக்கு மரத்தில் ரூ.5,001 பண முடிப்பு கட்டி இருந்தோம். போட்டி முடியும் நேரத்தில் நான்கு அடுக்கு வளையம் அமைத்து பண முடிப்பை எடுத்தனர். அவர்கள் பணத்தை பங்கிட்டு கொள்ளாமல், பரிசு பொருட்களாக தரும்படி கேட்டார்கள். அதன்படி பரிசு பொருட்களை வாங்கி கொடுத்தோம். அதை பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள்’’ என்றார்.