“நான் என் வாழ்நாளில் எந்த ஒரு தடைசெய்யப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தியதேயில்லை. எப்போதுமே நியாயமாக விளையாடுவதுதான் என் ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம் பிரதமரே நீங்கள்தான் என் கடைசி நம்பிக்கை-,வலுதூக்குதல் வீராங்கனை குமுக்சம் சஞ்சிதா சானு
மணிப்பூரைச் சேர்ந்த வலுதூக்குதல் வீராங்கனை குமுக்சம் சஞ்சிதா சானு, ஊக்கமருந்து சோதனையில் தனக்கு விதிக்கப்பட்ட தடையின் உண்மை நிலவரத்தை அறிய பிரதமர் மோடியின் தலையீடு கோரி உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2018-ல் சஞ்சிதா காமன்வெல்த் போட்டிகளில் 53கிலோ உடல் எடைப்பிரிவில் வலுதூக்குதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனையாவார். ஆனால் சர்வதேச வலுதூக்குதல் கூட்டமைப்பு, இவரது சிறுநீர் மாதிரியில் தடைசெய்யப்பட்ட டெஸ்டொஸ்டெரோன் அதிகம் இருந்ததாக மே மாதம் 15ம் தேதி இவரை நீக்கம் செய்து உத்தரவிட்டது. அதாவது நவம்பர் 18, 2017-ல் சேகரிக்கப்பட்ட மாதிரியில் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து இருந்ததாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் சஞ்சிதா சானு. இது சர்வதேச வலுத்தூக்குதல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு சில நாட்களுக்கு முன்னால் இவரை நீக்கம் செய்துள்ளது.

ஆனால் கூட்டமைப்பு ஏதோ தவறிழைத்து விட்டதாக சானுவிடம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய வலுதூக்குதல் விளையாட்டுக் கூட்டமைப்பு சஞ்சிதா சானுவுக்கு இந்த விஷயத்தில் ஆதரவாக இல்லை.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு சஞ்சிதா சானு எழுதிய உருக்கமான கடிதத்தில், “நான் என் வாழ்நாளில் எந்த ஒரு தடைசெய்யப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தியதேயில்லை. எப்போதுமே நியாயமாக விளையாடுவதுதான் என் ரத்தத்தில் ஊறியிருக்கும் விஷயம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உலகக்கோப்பை போட்டிகளின் போது காயமடைந்து உடற்சிகிச்சை மருத்துவத்தில் இருந்திருக்கிறார் சஞ்சிதா சானு. “அந்தப் போட்டித்தொடரில் காயம் காரணமாக என் ஆட்டம் மிக மோசமாக இருந்தது. அப்படியிருக்கும் போது ஊக்கமருந்து எடுத்துக் கொண்டதாகக் கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

மேலும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறும்போது, “நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவள், மணிப்பூரின் ஏழ்மையான கிராமத்திலிருந்து வந்தவள். நான் இந்த நிலையை எட்டுவதற்கு ஏகப்பட்ட இழப்புகளைச் சந்தித்து கஷ்டப்பட்டுள்ளேன். நம் மூவர்ணக்கொடி உயரத்தில் பறக்கப்பட வேண்டும் என்ற ஒரே கனவுக்காக அனைத்து தியாகங்களையும் செய்தேன். ஆனால் எனது 12 ஆண்டுகால கடின உழைப்பு, என் கனவு ஊக்கமருந்து விவகாரத்தினால் சிதைந்து போனது.

பிரதமரே நீங்கள்தான் என் கடைசி நம்பிக்கை, என்ன நடந்தது என்ற உண்மை எனக்கு தெரியவேண்டும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும். என்னுடைய சிறுநீர் மாதிரி மீது டி.என்.ஏ.சோதனை செய்யப்பட்டால் அது நான் நிரபராதி என்பதை அறிவிக்கும்” என்று உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.