100 சதவீதம் செஸ் விளையாடும் கிராமம்மரோட்டிச்சல்


அதிக நபர்கள் செஸ் விளையாடும் கிராமம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள மரோட்டிச்சல். ரப்பர் தோட்டங்கள் சூழ்ந்த இக்கிராமத்தில், இளைஞர்கள் கூடி விளையாட விளையாட்டுத்திடல் இல்லை. இக்கிராமத்தில் குடிப்பழக்கமும் அதிகமாக இருந்தது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வாக வந்ததுதான் செஸ். 
இக்கிராமத்தில் எல்லோராலும் 'மாமன்' என்று அன்போடு அழைக்கப்படும் நபராக உள்ளார் 'செஸ் உன்னிக்கிருஷ்ணன்', வயது 59. குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தவர்களை செஸ் விளையாட்டுக்கு அடிமையாக மாற்றியவர் இவர்தான்.
சுவாரசியமான அந்தச் சம்பவம் பற்றி அவர் கூறியதிலிருந்து...
'1970 - 80களில், எங்கள் கிராமத்தில் பலரும் சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். இக்கிராமத்தில் குடிப்பழக்கத்தால் பல குடும்பங்கள் அழிந்து கொண்டிருந்தன. கிராமத்தைக் காப்பாற்ற, சிலர் சேர்ந்து, குடிக்கு எதிரான ஒரு சங்கத்தை உருவாக்கினோம். 
சாராயம் காய்ச்சியதற்காக, காவல்துறையிடம் பிடிபட்ட நபர்களிடம் சென்றோம். அவர்களுக்கு செஸ் விளையாடக் கற்றுக்கொடுத்தோம். அவர்கள் அதிலேயே மூழ்கிவிட்டனர்.
இப்படியே கிராமம் முழுவதும் ஆண்களிடம் செஸ் விளையாட்டைப் பரப்பினோம். இதை விளையாட ஒரு சிறிய போர்டு இருந்தால் போதுமானது. இதனாலேயே, இது விரைவாகப் பரவியது. சிலர் செஸ் விளையாட்டுக்கு அடிமையாகவே ஆகிவிட்டனர்.
செஸ்ஸுக்கு அடிமையாக இருப்பது, குடிக்கு அடிமையாக இருப்பதைவிட நல்லதல்லவா? கவனம் அதிகம் தேவைப்படும் விளையாட்டு. கூட்டாக உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்தவர்கள், இன்று கூட்டாக அமர்ந்து செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.'' என்று சிரிக்கிறார் உன்னிக்கிருஷ்ணன். 
'செஸ் கற்றுக் கொடுக்கச் சொல்லியோ, விளையாட்டில் சந்தேகம் என்றோ எப்போது வேண்டுமானாலும் மாமனை அணுக முடியும். எங்கள் கிராமத்தில் முதலில் விளையாடக் கற்றுக்கொண்டது அவர்தான். 100 சதவீதம் செஸ் விளையாடும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுக் கொடுத்துவிட்டார்.' என்கிறார் மரோட்டிச்சல் கிராமத்தைச் சேர்ந்த சுசீந்திரன்.