நானும் அப்பாவும் தினமும் 5 கி.மீ. தூரம் மெதுவாக ஓடுவோம்-சர்வேஷ்.


உலகின் மின்னல் வேக மன்னன் உசேன் போல்ட்டைப் பார்த்து எல்லோரும் பிரமித்திருப்போம். அவரைப்போல் ஓட வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு வந்திருக்கும். ஒருசிலர் அதைச் செயல்படுத்தியும் காட்டியிருப்பார்கள். அவர்களில் சாதனை படைத்தவர்கள் எத்தனை பேர்? தாம்பரத்தைச் சேர்ந்த சர்வேஷுக்கு இந்தப் பெருமை கிடைத்திருக்கிறது.

4 வயதில் தொலைக்காட்சியில் உசேன் போல்ட் ஓட்டத்தைப் பார்த்தவர், உடனே பெற்றோரிடம் தானும் ஓடவேண்டும் என்று கூறியிருக்கிறார். விளையாட்டில் ஆர்வம்கொண்ட இவரது அப்பா, மகிழ்ச்சியோடு ஓட்டப் பயிற்சியை அளித்திருக்கிறார். வெகு விரைவிலேயே ‘கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ உட்பட பல சாதனைகளை நிகழ்த்தி, பெற்றோருக்கும் தான் படிக்கும் சாய்ராம் மேல்நிலைப் பள்ளிக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறார் சர்வேஷ்.

உங்களின் முதல் போட்டி எது?

நாங்கள் கடலூரில் வசித்தோம். அப்போது நடந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டேன். முதல் தடவையிலேயே இரண்டாம் பரிசைப் பெற்றேன். அதுதான் என்னுடைய திறமையை எடுத்துக் காட்டியது. அடுத்தடுத்து பல போட்டிகளில் கலந்துகொண்டு, பரிசுகளை வாங்கினேன். என் திறமையை மேலும் வளர்ப்பதற்காக, சென்னைக்குக் குடிபெயர்ந்துவிடோம்.

மாரத்தானுக்குத் தினமும் பயிற்சி செய்ய வேண்டுமா?

ஆமாம். நானும் அப்பாவும் தினமும் 5 கி.மீ. தூரம் மெதுவாக ஓடுவோம். பிறகு ட்ரெட்மில்லில் 15 நிமிடங்கள் நடப்பேன். இதுவரை மாரத்தான் போட்டிகளில் நான் ஓடிய தூரம் 631 கி.மீ.

நீண்ட ஓட்டம் என்ற மாரத்தானை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் ஓட்டப்பந்தய வீரனாக வேண்டும் என்றுதான் நினைத்தேனே தவிர, மாரத்தான் பற்றியெல்லாம் தெரியாது. மாரத்தான் போட்டி வந்தவுடன் என்னை அதில் சேர்த்துவிட்டார் அப்பா. அப்படித்தான் மாரத்தானுக்குள் வந்தேன். இல்லை என்றால் குறைந்த தூரம் ஓடும் ஓட்டப்பந்தய வீரனாகியிருக்கலாம். அது எனக்கு இன்னும் எளிதாக இருந்திருக்கும். இப்போது என் இலக்கு மாரத்தானில் சாதிப்பதுதான். பள்ளி சார்பில் ஓட்டப்பந்தயங்களில் மட்டும் கலந்து கொள்கிறேன்.

ஓட்டம் தவிர, வேறு என்ன ஆர்வம்?

ஓவியம் வரைவேன். கைவினைப் பொருட்கள் செய்யப் பிடிக்கும். அம்மாவிடம் கதை கேட்கப் பிடிக்கும்.

படிப்பில் சர்வேஷ் எப்படி?

முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துவிடுவேன். போட்டிகளுக்காக மட்டுமில்லை, எதற்காகவும் இதுவரை விடுமுறை எடுத்ததே இல்லை. அதுக்கும் பரிசு வாங்கியிருக்கிறேன். நேரத்தைத் திட்டமிட்டுக்கொண்டால், பல விஷயங்களைச் செய்ய முடியும்.

உங்கள் ரோல்மாடல் யார்?

சைலேந்திரபாபு ஐபிஎஸ்தான் என்னுடைய ரோல்மாடல். அவரும் மாரத்தான் வீரர். அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அவரைப்போலவே ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

எதிர்கால லட்சியம்?

மாரத்தான் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெறுவதுதான் என் லட்சியம்.