விஷாலி, தமிழகத்தின் முன்னணி வலு தூக்குதல் வீராங்கனைகளில் ஒருவர்.


சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த விஷாலி, தமிழகத்தின் முன்னணி வலு தூக்குதல் வீராங்கனைகளில் ஒருவர்.

அடுத்து தனது இலக்கு, தேசிய, சர்வதேசப் போட்டிகள்தான் என்கிறார் இவர்.

வலு தூக்குதலுக்கான தீவிரப் பயிற்சியில் இருந்த விஷாலியை சந்தித்தபோது...

உங்களைப் பற்றி ஓர் அறி முகம்...

நான் சவுகார்பேட்டையில் பெற்றோர், தம்பி, தங்கையுடன் வசிக்கிறேன். அப்பா விஜயகுமார் வங்கி ஒன்றில் கிளார்க் ஆக பணிபுரி கிறார். அம்மா ஜெயந்தி இல்லத்தரசி. அண்ணன் வினோத்குமார் ஐதராபாத் தில் பணிபுரிகிறார். தம்பி சாய்கிரண் 10-ம் வகுப்பு படிக்கிறார். தங்கை ஸ்ருதி பி.காம் முதலாமாண்டு பயில் கிறார். பி.காம் முடித்த நான், தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் எம்.எஸ்.டபிள்யூ படிக்கிறேன்.

நீங்கள் ஆரம்பம் முதலே வலு தூக்கு தலில்தான் ஈடுபட்டு வருகிறீர்களா?

இல்லை. நான் ஒரு தடகள வீராங்கனை. சவுகார்பேட்டை மூங்கிபாய் கோயங்கா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த நான், தடகளத்தில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்தேன். கபடி வீராங்கனையாகவும் திகழ்ந்தேன். மாநில, தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடியுள்ளேன்.

அப்புறம் நீங்கள் வலு தூக்குதலுக்கு வந்தது எப்படி?

நான் எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும்போது உடற்பயிற்சிக்காக ஷெனாய் நகரில் உள்ள பிட்ரீ பிட்னஸ் சென்டருக்கு சென்றேன். அங்கு பல வலு தூக்குதல் வீரர்கள் பயிற்சிக்கு வருவார்கள். அவர் களைப் பார்த்து, நாமும் ஏன் இதில் ஈடுபடக் கூடாது என்று தோன்றியது. அந்த மையத்தின் பயிற்சியாளரும், முன்னாள் ஆசிய அளவிலான வலு தூக்குதல் வீரருமான மாயக்கிருஷ்ணனும் நான் இவ்விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்தார்.

வலு தூக்குதலுக்கு மாறியது எப்படி இருந்தது?

நான் நினைத்ததை விட இது கடினமாகவே இருந்தது. பயிற்சி முடிந்து வீடு திரும்பினால் வலி பின்னியெடுக்கும், மிகவும் சோர்வாக இருக்கும். வீட்டிலும்கூட, பெண்ணாக இருந்துகொண்டு இதுபோன்ற கடினமான விளையாட்டில் ஈடுபட வேண்டுமா என்று ஆரம்பத்தில் யோசித்தார்கள். ஆனால் இன்று, வலு தூக்குதல் இல்லாமல் நான் இல்லை. தற்போது இதற்கான பயிற்சியில் ஈடுபடாமல் இருந்தால்தான் கடினமாக இருக்கிறது.

எவ்வளவு நாட்களாக நீங்கள் போட்டிகளில் பங்கேற்று வருகிறீர்கள்?

நான் 2017-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து, அதாவது சுமார் இரண்டாண்டு களாக போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். மாவட்ட, மாநில போட்டிகளில் அதிகம் பங்கேற்றிருக்கிறேன்.

இதில் உங்களின் சாதனை என்ன?

நான் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் சுமார் 15 பதக்கங்களைக் கைப்பற்றியிருக்கிறேன். மாவட்ட அளவில் ஒருமுறையும், மாநில அளவில் இருமுறையும் ‘வலிமையான பெண்’ பட்டம் பெற்றிருக்கிறேன். பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறேன்.

தேசியப் போட்டிகளில் உங்களின் செயல்பாடு குறித்து?

நான் கடந்த ஜூலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த சீனியர் தேசிய வலு தூக்குதல் போட்டியிலும், நவம்பரில் சண்டிகரில் நடைபெற்ற ஜூனியர் தேசியப் போட்டியிலும் பங்கேற்றேன். இரண்டிலும் என்னால் முடிந்த அளவு சிறப்பாகத் திறமையை வெளிப்படுத்தினேன். ஆனால் இரண்டு போட்டி களிலும் எனக்கு நான்காமிடம்தான் கிடைத்தது. என்றாலும் எனது தேசிய பதக்கக் கனவை விரைவிலேயே நிறைவேற்றி விடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பளு தூக்குதலுக்கும், வலு தூக்குதலுக்கும் என்ன வித்தியாசம்?

அதிகபட்ச எடையைத் தூக்கும் சவால், பளு தூக்குதல். அதேநேரம், ஒருவரின் வலுவைச் சோதிப்பது வலு தூக்குதல். இரண்டும் ஓரளவு நெருங்கியவைதான். பளு தூக்குதலில் ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் என்று இரு பிரிவுகளே உண்டு. ஆனால் வலு தூக்குதலில் ஸ்குவாட், பெஞ்ச் பிரெஸ், டெட் லிப்ட் என்று மூன்று பிரிவுகள் இருக்கின்றன. இந்த மூன்று பிரிவுகளிலும் பெறும் புள்ளிகளை கூட்டித்தான் வெற்றியாளரைத் தீர்மானிப்பார்கள்.

வலு தூக்குதலில் நீங்கள் சாதனை எதுவும் புரிந் திருக்கிறீர்களா?

நான் கடந்த ஆண்டு மே மாதம், மாநில அளவிலான போட்டியில், ஸ்குவாட் பிரிவில் புதிய சாதனை புரிந்தேன். பெண்கள் 57 கிலோ எடைப் பிரிவில் நான்தான் மாநிலத்தின் ‘நம்பர் 1’ வீராங்கனையாகத் திகழ்கிறேன்.

மாநில அளவில் நிறைய சாதித் திருக்கும் நீங்கள், தேசிய அளவிலான போட்டிகளில் கடினமாக உணர்கிறீர்களா?

நான் முன்பே கூறியபடி, சுமார் இரண்டாண்டு காலமாகத்தான் வலு தூக்குதலில் ஈடுபட்டு வரு கிறேன். இந்நிலையில், இவ்வளவு தூரம் சாதித்திருந்தாலும், தேசிய பதக்கம் வெல்லாதது வருத்தமாகத்தான் இருக்கிறது. தேசியப் போட்டி களுக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி வீராங்கனைகள் வருவார்கள் என்பதால் அங்கு போட்டி கடுமையாக இருக்கும். ஆனால் இன்னும் கடினமாக உழைத்தால், தேசியப் போட்டிகளில் சாதிப்பது சாத்தியமே. அந்தத் தன்னம்பிக்கை எனக்கு இருக்கிறது.

தேசியப் போட்டி வெற்றிதான் உங்கள் லட்சியமா?

இல்லை. இந்தியா சார்பில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்ல வேண்டும். ஏற்கனவே ஒரு சர்வதேசப் போட்டிக்கான தேசிய முகாமில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால் சில காரணங்களால் அதில் பங்கேற்கவில்லை. அடுத்து வரும் தேசிய முகாம் வாய்ப்பை நிச்சயம் பயன்படுத்திக்கொள்வேன். காமன்வெல்த் போட்டி நடைபெறவிருக்கிறது. முடிந்தால் அதில் கூட பங்கேற்று எனது திறமையைக் காட்டுவேன்.

அடுத்து நீங்கள் எதிர்நோக்கியிருக்கும் போட்டி?

வருகிற ஏப்ரலில் மாநில ஜூனியர் வலு தூக்குதல் போட்டி இருக்கிறது. எனக்கு கால் முட்டி காயம் காரணமாக தற்போது சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. காயம் குணமானதும் மாநிலப் போட்டியைக் குறிவைத்து பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிவிடுவேன்.

உங்கள் வீட்டில் உங்களைத் தவிர வேறு யாரும் விளையாட்டில் இருக்கிறார்களா?

என் அண்ணனும் தம்பியும் கால்பந்து வீரர்கள், அப்பா கேரம் வீரர்.

ஒலிம்பிக் விளையாட்டான பளு தூக்குதலில் இறங்காமல், வலு தூக்குதலில் ஈடுபடத் தொடங்கியது குறித்து உங்களுக்கு வருத்தம் ஏதாவது...?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. தற்போது ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் வலு தூக்குதல் உள்ளது. ஒலிம்பிக்கிலும் இவ்விளையாட்டைச் சேர்க்க இது சார்ந்தவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.

உங்கள் வளர்ச்சியின் பின்னணியில் உள்ளவர்கள்?

பெற்றோர், பயிற்சியாளர், எனது வழிகாட்டியான அண்ணன் ஆகியோருடன், என்னை விளையாட்டில் ஈடுபடுத்திய பள்ளி விளையாட்டு ஆசிரியை கிறிஸ்டினாவையும் நான் நன்றியோடு நினைத்துக்கொள் கிறேன். இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். நான் ஓர் அலுவலகத்தில் அக்கவுண்டன்டாகவும், ஜிம்மில் பயிற்சியாளராகவும் பணிபுரிந்துதான் எனக்கான செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஸ்பான்சர், அரசு ஆதரவு இருந்தால் இன்னும் பொருளாதாரக் கவலையின்றி என்னால் வலு தூக்குதலில் கவனம் செலுத்த முடியும்.

விஷாலி புதிய உயரங்களைத் தொடும் வகையில் ஆதரவுக் கரங்கள் நீளட்டும்.