இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். வெற்றி எளிதாகும்!


கடைசி நிமிடத்தில் தோற்று விட்டோமே என்று கவலைப் படாதீர்கள். வெற்றிக்கு அருகிலே வந்து விட்டீர்கள். -சதா பாரதி“எவ்ளோ நேர்மையா இருக்கேன்? எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது”ஒவ்வொரு வெற்றியாளரும் தன்னை சுய பரிசோதனை செய்துகொள்ளும்போது தன்னைத் தானே கேட்டுக் கொள்ளும் கேள்விதான் இது. நமது நேர்மைகள் தோற்றுப் போகும்போது நம்மை அறியாமல் ஒருவித எதிர்மறையான எண்ணங்கள் நமக்குள் புகுந்து நம்முடைய செயல்பாடுகளை முடக்கிவிட முயற்சி செய்கின்றன. அது போன்ற தருணங்கள் நம்முடைய வாழ்வின் முக்கியமான தருணங்களாகும். ஆதை நாம் எதிர்கொள்வதில்இருந்தே நம்முடைய பலம் நமக்கு தெரிய ஆரம்பித்து விடுகிறது வெற்றி- தோல்வி என்பதெல்லாம் பிறர் பார்வைக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியைத் தரலாம். வெற்றியாளர்களைப் பொறுத்தளவில் வெற்றி தோல்விகள் ஒரு போதும் அவர்களை பாதிப்பதில்லை. அதனால் கலங்குவதுமில்லை. கற்று கொள்கிறார்கள். ஓவ்வொரு அசைவிலும் இருந்து ஏதாவது ஒன்றை கற்கும் மனநிலையிலே இருப்பவர்களுக்கு தோல்விகளாக நாம் நினைப்பவைகள் அனுபவங்களாக மாறி விடுகின்றன.
சாதனையாளர்கள் : சாதனையாளர்கள் அனைவருமே ஆரம்பகாலத்தில் தோல்விகளை நிறைய பெற்று அதன்மூலமாக தன்னை உரமாக்கிக் கொண்டனர் என்பதே உண்மை. இரண்டாம் வகுப்பு பெட்டியில் இருந்து இறக்கிவிட்ட பின்னரே தனது தேசம் அடிமையில் இருக்கிறது என்பதை உணர்ந்தார் மகாத்மா. அதன் பின்னரே அவருடைய ஈடுபாடு மிகத்தீவிரமாக சுதந்திர போராட்டத்தில் இருந்தது. சின்ன சின்ன புறக்கணிப்புகளில் சோர்ந்து விடக் கூடாது என்பதை பல வரலாறுகள் சொல்லிக் கொடுத்துள்ளது. தோல்விகளின் மன்னன் என்று முத்திரை குத்தப்பட்ட ராபர்ட் புரூஸ் மலைக் குகையில் அமர்ந்து கொண்டு சிலந்தி வலைப்பின்னலைப் பார்த்தே தனது வெற்றிக்கான வழிமுறைகளை வழிவகுத்துக் கொண்டார்.சில நல்ல கனவுகளுக்காக பொறுமையாக காத்திருப்பதில் தவறேதுமில்லை. அந்த நேரத்தில் தொடர்ச்சியான முயற்சிகளோடு காத்திருத்தல் அவசியமாகிறது. நமது வலிமை நமக்கே தெரிய வரும் தருணங்கள் அபூர்வமானவையே. அந்த தருணங்களுக்காக நாம் நன்றி செலுத்தலாம்.“இன்று இல்லாவிட்டால் என்று,இப்போது இல்லா விட்டால் எப்போது?” இந்த இரண்டு மந்திர வாசகங்களே தேசத்தை அடியோடு மாற்றின என்பதை நாமெல்லாம் அறிவோம். 1945 ஆகஸ்ட் 6ம் நாள் உலக சரித்திரத்தில் ஒரு கறுப்பு நாள் என்றால் அது மிகையாகாது. இரண்டாம் உலகப்போரை முடிவுக்குகொண்டுவந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்ட தினம். ஜப்பான் நாட்டின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடைபெற்ற நாள். லட்சக்கணக்கான நபர்கள் கொல்லப்பட்டும் உடல் ஊனமாகவும் ஆக்கப்பட்ட தினம். சரிந்த ஜப்பானை எழச்செய்த வாசகமே மேலே குறிப்பிடப்பட்ட வாசகங்கள்.ஒவ்வொரு வீட்டு வாசல்களின் கதவுகளிலும் இந்த வாசகங்கள் எழுதப்பட்டன. இந்த வாசகங்கள் மட்டுமே ஒரு தேசத்தை மீண்டு எழச்செய்தன என்பதில்லை. ஆனால் அவர்கள் மீண்டும் எழுவதற்கு காரணம் இந்த வாசகங்களுமே காரணமாகும். உலகிலேயே இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றே. ஆனால் அவர்கள் ஒரு போதும் இந்த சீற்றங்களைக் கண்டு அஞ்சுவதில்லை. மாறாக ஒவ்வொரு சீற்றத்தின்போதும் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை கற்றுக் கொண்டு நம்பிக்கையோடும் முன்னை விட வலிமையோடும் எழுந்து நிற்கின்றனர்.உலக அளவில் தன்னம்பிக்கை வளர்க்கும் வகையிலே பேசி வரும் பேச்சாளர்கள் உதாரணமாக காட்டிவரும் நாடாக ஐப்பான் வளர்ந்த நிற்கிறது எனில் அதுவே தன்னம்பிக்கையின் உச்சம்.
வெற்றி மனோபாவம் : தன்னம்பிக்கை குறித்து எழுதிவரும் என்னைப் போன்றவர்களுக்குமானசீக குருவான, தமிழில் தன்னம்பிக்கை இலக்கியத்தை தொடங்கி வைத்த டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி தனது “வெற்றி மனோபாவம்” என்ற நுால் முழுவதுமே ஜப்பான் மக்களின் தன்னம்பிக்கை குறித்து எழுதியிருப்பார்.எத்தனை சீரழிவு தோல்வி வந்த போதும் கலங்காமல் எழுந்து நிற்கும் ஜப்பானிய மனோபாவத்தின் அடிப்படையே அவர்களின் தாய்மொழிக் கல்வியே ஆகும். இதில் கூடுதல் சிறப்பு என்னவெனில் அந்த ஜப்பானிய மொழிச் சொற்களில் 500 சொற்களுக்கும் மேலே நமது தமிழ்ச் சொற்கள் உள்ளன என்பதே நாமெல்லாம் பெருமை கொள்ளச் செய்யும் செய்தியாகும்.தேடி வரும் பிரச்சினைகளுக்கும் தோல்விகளுக்கும் நன்றி சொல்லுங்கள். உங்களின் வலிமையை சுய பரிசோதனை செய்துகொள்ளும் தருணங்களுக்காகவும் காத்திருங்கள்.மீண்டும் வலிமையோடு எழுங்கள். உங்களை நோக்கி வீசப்படும் கற்களையும் விமர்சனங்களையும் உங்களை வலிமையாக்குவதற்காக ஏற்றுக் கொண்டு மாற்றிவிடுங்கள்.உங்களை வலிமையோடு எழச்செய்த பிரச்சினைகளுக்கு நன்றி கூறுங்கள்.'நன்று கருது நாளெல்லாம் வினை செய் நினைப்பது முடியும்'பாரதி இந்த வார்த்தை போதும் நம்முடைய நம்பிக்கை வெற்றி பெறுவதற்கு.
நமக்கான பாதை : நல்லவற்றை நினைக்கும்போதே நமக்கான பாதை திறந்துவிடுகிறது. அந்த நல்லவற்றை நோக்கி நகரும்போது நம்முடைய நல்ல எண்ணங்களே நம்மை வழிநடத்தும். நாம் செய்யும் செயல்களில் இருக்கும் நேர்மையும் நம்பிக்கையுமே நம்மை மற்றவர்களின் பார்வையில் தலைவர்களாக உருவெடுக்க வைக்கும். நல்ல நம்பிக்கையோடு செய்யும் செயல்கள் ஒருபோதும் தோற்பதில்லை.முதலில் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளுங்கள். அதை எதிராளியின் இடத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள். பிரச்னைகள் தீர்ந்து போகும்கவலைகளால் எதையும் கடந்துவிட முடியாது. நம்முடைய கவலைகள் நம்மை இன்னமும் பலவீனப்பட்ட மனிதர்களாக மாற்றிவிடும் என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். எல்லோருடைய மனதிலும் உள்ள பிரச்சினைகளைச் சொல்ல ஆரம்பித்தால் இந்த உலகத்தில் யாருக்குமே நேரம் போதாது. கடல்நீரினை விட அதிகமாக கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்து விடும். நமதுவீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் நமக்கு ஏற்படும் சிக்கல்களை நாம் சொல்லி மாளாது.அந்த சிக்கல்களை நாம் திறமையோடு கையாளத் தெரிந்திருந்தால்மட்டுமே நாம் அடுத்த நிலை நோக்கி நகர முடியும். இல்லையெனில் வருத்தப்பட்டுக் கொண்டு ஒரே இடத்தில் தேங்கிக் கிடக்கத்தான் வேண்டும்.நாமும் நம்முடைய பகைமைகளை மறந்து எல்லோரிடமும் இயல்பாக பழகும்போதுதான் இந்தவாழ்க்கைக்கான அர்த்தம் புரிய ஆரம்பிக்கிறது. இந்த சமூகம் என்பதே பிறரோடு இணைந்து இயங்குவதில் இருந்துதான் தொடங்குகிறது எனலாம். ஒவ்வொரு முறையும் நாம் நம்முடைய சுயநலத்ததின் பேரில் அடுத்தவர்களை புறக்கணித்து வாழக் கூடாது. ஒருவருக்குஒருவர் அன்பு செய்து இந்த உலகம்நலம் பெற வேண்டும் என்றநோக்கத்திற்காகவே வாழ்தல் அவசியமாகிறது.
தடைகளை தாண்டி : சாதனையாளர்கள் கடுமையான போட்டிகளையும் தடைகளையும் தாண்டியே வெற்றி பெற்றுஉள்ளார்கள். ஒவ்வொரு நாளும் நமக்கென வரும் தடைகளை வணங்கி வரவேற்றுப் பாருங்கள். தோல்விகள் நம்மைக் கண்டு விலகி ஓட ஆரம்பித்துவிடும். இந்த நாள் முதல் எனது வெற்றி தொடங்கப்போகிறது. துன்பங்கள் மறையப் போகிறது என்ற உணர்வோடு ஒவ்வொரு நாளையும் அணுகுங்கள்.நம்முடைய வெற்றிக்கு பெரும் தடையாக இருக்கும் சோம்பலையும் தயக்கத்தையும் எறியுங்கள். அனைவரோடும் இயல்பாகப் பழகுங்கள்.நம்மில் பலருமே கடினமான உழைப்பாளிகள்தான் என்பதிலே எள்ளளவும் ஐயமில்லை. தொடர்ச்சியாக நம்பிக்கையோடு உழைத்து வருகிறோம். ஆனால் பல நேரங்களில் வெற்றிக்கு மிக அருகிலே வந்து தளர்வுற்று சற்றே சோம்பலின் காரணமாக வெற்றியை இழந்து விடுகிறோம். இன்னமும் ஒரு அடி எடுத்து வைத்தால் வெற்றி என்ற நிலையை உணராமலேயே தோல்வி என்று நினைத்து திரும்பி விடுகிறோம். அவர்கள் அத்தனை பேருக்கும் நான் சொல்லும் அனுபவ வார்த்தைகள். “இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்” என்பதே ஆகும். வெற்றிக்கு அருகில் நின்று கொண்டு தோற்றவர்களே இங்கு அதிகம். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள். வெற்றி எளிதாகும்!
-பேராசிரியர் சங்கரராமன்எஸ்.எஸ்.எம். கலைஅறிவியல் கல்லுாரிகுமாரபாளையம்

99941 71074