நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக்க சாதிக்கற மனநிலை வேணும்.


வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டு. மாணவப் பருவத்திலேயே எதிர்கால இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு அதில் சாதித்துக்காட்ட வேண்டும் என, ஊக்கத்தோடு செயற்பட்டு வெற்றியை எட்டும் பலர் இருக்கிறார்கள். வெற்றி எளிதில் கிடைத்து விடுவதல்ல. விடாமுயற்சியும், ஊக்க மனநிலையும் அதற்குத் தேவை. வாழ்க்கையின் வெற்றி சாதிப்பதிலா? புகழ் பெறுவதிலா? என்ற தலைப்பில் மதுரை, மேலூர், ஜாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் உரையாடினார்கள். அவர்களது கருத்துகளை அறிந்துகொள்வோம்.

பெ.கார்த்திக்தர்ஷன், 12ஆம் வகுப்பு
சாதிக்கற மனநிலை உள்ளவங்களுக்கு புகழைப் பத்தியெல்லாம் கவலை இருக்காது. அவங்களோட நோக்கம் எடுத்த காரியத்தை முடிக்கறதிலதான் இருக்கும். சாதனை பண்ணிட்டா புகழ் தானா வந்து சேர்ந்துடும். அதனால புகழுக்காகத்தான் சாதனை செய்யறோம்னு சொல்ல முடியாது. புகழைத் தேடி நாம ஒரு விஷயத்தை சாதிக்க நினைச்சா அதைச் செஞ்சு முடிக்க முடியாது.

பா.விக்னேஷ், 12ஆம் வகுப்பு
சாதனை, புகழ் இரண்டுமே ஒண்ணோட ஒண்ணு தொடர்புடையது. சாதனை செஞ்சாதான் புகழ் கிடைக்கும். ஆனா, எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் சாதனை இல்லன்னா ஒரு பயனும் இல்ல. ஒரு விஷயத்தை சாதிக்கற மனநிலை வந்துட்டா, நம்ம எண்ணம் செயல் எல்லாமே அதைப் பத்தி மட்டும்தான் இருக்கணும். அதுக்குப் பிறகு புகழ் தானா வந்துடும்.

பா.விஜயசாரதி, 10ஆம் வகுப்பு
சாதிக்கற எல்லோருமே புகழ் அடையறது கிடையாது. திறமையுள்ள எத்தனையோ பேர் சாதனைக்குப் பிறகும் அறியப்படாமலே இருக்கறாங்க. நாம ஒரு விஷயத்தைச் சாதிச்சா, அது நிறைய பேருக்குத் தெரிஞ்சாதான் புகழ்பெற முடியும். சாதிக்கணும்ங்கிறது அவசியந்தான். அந்த சாதனையை வெச்சு புகழையும் பெறணும்.

க.அட்சயா, 10ஆம் வகுப்பு
ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில குறிக்கோள் இருக்கணும். அது சின்ன விஷயத்தை சாதிக்கறதாகூட இருக்கலாம். புகழுக்காக எதையாவது சாதிக்கணும்னு நினைச்சா, அது சரி கிடையாது. வாழ்க்கையில வெற்றி பெறணும்னா நம்மோட திறமைகளை வளர்த்துக்கணும். திறமைகளை வளர்த்துக்கறதே பெரிய சாதனைதான்.

பா.சுதர்சனா, 11ஆம் வகுப்பு
படிப்புல நிறைய மதிப்பெண் எடுக்கறது சாதனைதான். அது புகழை மட்டுமே தேடித் தர்றதுக்காக இல்லை. நல்ல மதிப்பெண் எடுத்தா அடுத்து நல்லா படிக்கலாம். நல்ல வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பா இருக்கும். அதுக்கான புகழ் கிடைக்கணும்னு அவசியமில்ல. நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக்க சாதிக்கற மனநிலை வேணும்.

தே.ஜனனி, 12ஆம் வகுப்பு
புகழுக்காகச் சாதிக்க நினைக்கறது வேற விஷயம். ரொம்ப தூரம் நீச்சலடிச்சு கடக்கறது, சிறப்பா விளையாடறது, இது போன்ற விஷயங்களில புகழ் கிடைக்கும். நிறைய பேருக்கு இது மூலமா அரசு வேலைகூட கிடைக்கும். ஆனா, படிப்பு விஷயத்துல நாம பண்ற சாதனை, புகழைத் தேடித் தருதோ இல்லையோ, நம்ம வாழ்க்கையை வளமாக்க உதவும்.