தரமான தங்களது தயாரிப்புகளை ஒரு நாள் இந்திய கிரிக்கெட் அணி பயன்படுத்தும்


காஷ்மீர் என்றாலே குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் போன்ற விஷயங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால், இயற்கை வளம் மிக்க இந்த அழகிய பகுதியில், பல்வேறு அழகான விஷயங்களும் வளர்ந்து வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் ரிபாத் மசூதியால் (Rifat Masoodi) நடத்தப்படும் மசூதி ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் எனும் நிறுவனம். இந்நிறுவனம் தயாரிக்கும் கிரிக்கெட் மட்டைகள் உள்ளூரில் மட்டுமல்லாது, டில்லி, லாகூர் ஆகிய பகுதிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
இரண்டு குழந்தைகளின் தாயான ரிபாத் (40 வயது), நர்வாரா எனும் பகுதியில் வசிப்பவர். இவரது கணவர் ஷௌகத் மசூதி, கால்பந்தாட்டப் பயிற்சியாளர். இவரது தந்தையால் 1970இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, காஷ்மீரில் புகைந்த வன்முறையால் தொய்வடைந்து நிறுத்தப்பட்ட ஏராளமான வர்த்தக முயற்சிகளில் ஒன்றாகும்.
1999இல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தானுக்கு பஸ் பயணம் மேற்கொண்டு இணக்கம் ஏற்படுத்தியதால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் தொழில் வாய்ப்புகள் துளிர்த்தன. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய குடும்பத் தொழிலை மீட்டெடுத்தார் ரிபாத். 
ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களைத் தேடிப் பிடிப்பது சற்று சிரமமாக இருந்தது என்கிறார் இவர். மொத்த விலைக்கு வாங்கும் வாடிக்கையாளர்களை தங்கள் வீட்டுக்கே வரவழைத்து, தங்கள் தயாரிப்பின் சிறப்புகளை விளக்கியபின் வியாபாரம் நன்கு சூடுபிடித்தது. ஜி.எஸ்.டி. அமலானதற்குப் பிறகு சற்று சரிந்திருந்தாலும்கூட சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக ரிபாத் கருதுகிறார்.
இக்குடும்பத்துக்குச் சொந்தமான இரண்டு மாடிக் கட்டடம்தான் ஆலை. கீழ்த்தளத்தில் இயந்திரங்களை அமைத்திருக்கிறார்கள். எஞ்சிய பகுதிகள், மூலப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகளை வைக்கவும், பேக்கிங் செய்யவும் பயன்படுகிறது. ஐந்து ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனத்தில், ரிபாத்தும் ஊழியர்களுடன் அமர்ந்து வேலைகளைச் செய்கிறார். ஆர்டர் அதிகமிருக்கும் நாட்களில் இரவுப் பணியிலும் உடன் இருக்கிறார். 
சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் ரிபாத், தரமான தங்களது தயாரிப்புகளை ஒரு நாள் இந்திய கிரிக்கெட் அணி பயன்படுத்தும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.