ரஷ்யாவின் தேசிய விளையாட்டு கெட்டில்பெல்


ஜிங்கிள்பெல்' கேள்விப்பட்டிருப்போம். 'கெட்டில்பெல்' தெரியுமா? அது ஒரு விளையாட்டு. அதற்கு ஆசிய அளவில் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறதாம். அதில், தமிழகத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஹரிஹரன் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் என்ற செய்தி ஆச்சரியத்தை அளித்தது. உடனே விக்னேஷ் ஹரிஹரனைத் தொடர்புகொண்டு 'கெட்டில்பெல்' என்பது என்ன விளையாட்டு? என்று கேட்டோம்:
“கெட்டில்பெல் விளையாட்டு 1,700 ஆண்டுகள் பழமையானது. தமிழகத்தில் 10 பேருக்குத்தான் இந்த விளையாட்டை முறையாக ஆடத் தெரியும். இதில், ரஷ்யர்கள்ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். விரைவில் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. இதை பிரபலப்படுத்தும் முயற்சியில், 30 பேருக்கு இலவசமாகப் பயிற்சியளித்து வருகிறேன். 
தஞ்சாவூர் என் பூர்விகம். வளர்ந்தது சென்னையில். ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. ஐ.டி. நிறுவனத்தில் கைநிறைய சம்பளம்.செய்யும் பணியில் திருப்தி இல்லாததால், வேலையை விட்டுவிட்டு, ஃபிட்னஸ் பயிற்சி மையம் தொடங்கினேன்.
வெறுமனே உடல் அழகைக் கூட்டும் பயிற்சிகளைக் காட்டிலும், ஆக்கப்பூர்வமான ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சிகளை அறிமுகப்படுத்த முயற்சி செய்தேன். அப்போதுதான், 'கெட்டில்பெல்' பற்றிக் கேள்விப்பட்டேன். ஒற்றைக் கையால், அதிக எடை கொண்ட இரும்பு உருளையை, தொடர்ந்து தலைக்கு மேல் உயர்த்தியும், கீழிறக்கியும் ஆட வேண்டும். எடை 16 கிலோ, 32 கிலோ, 40 கிலோ வரை இருக்கும். எந்த வயதினரும் பயிற்சி செய்யலாம்; பொறுமை மிக அவசியம். நுணுக்கத்தையும், வலியைத் தாங்கும் ஆற்றலையும் இவ்விளையாட்டு வழங்கும். 
இன்றைய தலைமுறையினர், முதுகுவலி, கழுத்து வலி, படியேறினால் மூச்சு வாங்குதல் என்று சிரமப்படுகின்றனர். ஜிம்முக்குச் சென்றாலும், உடல் அழகில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், ஃபிட்னஸில்தான் கவனம் செலுத்த வேண்டும். அதற்காக கெட்டில்பெல் போன்ற ஏதேனும் விளையாட்டு ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 
ஐ.டி. அளவுக்கு வருமானம் இல்லை; ஆனாலும், விளையாட்டு வீரராகவும், இளைஞர்களை ஆரோக்கியமாக்கும் பயிற்சியாளராகவும் இருக்கிறோம் என்ற மனநிறைவு உள்ளது.” என்றார்.
ரஷ்யாவின் தேசிய விளையாட்டு கெட்டில்பெல். அங்கு நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டியில் வெல்வதுதான் விக்னேஷின் அடுத்த இலக்கு!