நான் சவால்களைச் சந்திக்க தயாராகவே உள்ளேன்!’- சிந்து.


பேட்மிண்டன் விளையாடும் அனைவருக்கும், ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வெல்வது உச்சபட்சக் கனவுகளில் ஒன்றாக இருக்கும்.

நமது நட்சத்திரம் பி.வி. சிந்துவும் அதற்கு விதிவிலக்கில்லை. அவரது பரம வைரியான உலக சாம்பியன் கரோலினா மரின் காயம் காரணமாக இந்த ஆண்டு போட்டியில் ஆடப் போவதில்லை.

இது சிந்து உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு அனுகூலமான விஷயம் என்று பேட்மிண்டன் விமர்சகர்கள் கருதினால், சிந்து வேறு மாதிரி சொல்கிறார்...

‘‘இந்த ஆண்டு ஆல் இங்கிலாந்து போட்டியில் வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நிச்சயமாக இது எளிதாக இருக்காது. காரணம், உலகின் டாப் 15 வீராங்கனைகளும் ஒரே மாதிரியான ஆட்டத்தரம் கொண்டவர்கள்.’’

கடந்த மாத இறுதியில், சாய்னா நேவாலுடன் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் மோதும்போது மரின் காயமடைந்தார்.

‘‘இந்தோனேஷிய போட்டியின்போது மரினுக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அது வருத்தத்துக்குரிய விஷயம்தான். ஆனால் காயம் என்பது எந்த ஒரு வீரர், வீராங்கனையின் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கம். அதேநேரம், இங்கிலாந்து போட்டியில் மோதல் அட்டவணை எளிதாக இருக்கும் என்றோ, போகிறபோக்கில் வென்றுவிடலாம் என்றோ கருத முடியாது. அங்கு ஒவ்வொரு போட்டியுமே முக்கிய மானதுதான், கடினமானதுதான். ஒவ்வொரு வீராங்கனையின் ஆட்டபாணியும் வேறுபட்டது. ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றிரண்டு வீராங்கனைகள் நன்றாக ஆடுவார்கள். குறிப்பாகத் தற்போது சீன, தென்கொரிய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்’’ என்கிறார் சிந்து.

கடந்த டிசம்பரில் வேல்டு டூர் பட்டம் வென்றதன் மூலம் 2018-ம் ஆண்டை சிந்து வெற்றிகரமாக முடித்தார். அவர், கடந்த காலத்துக்கு அதிக முக்கியத் துவம் அளிப்பவரில்லை என்றபோதும், அந்த வெற்றி அவரது தன்னம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது.

‘‘2018-ம் ஆண்டு நல்லவிதமாக விடைபெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் 2018 முடிந்து போய்விட்டது. இது 2019-ம் ஆண்டு. புதிய ஆண்டில் எனக்குள் புதிய தீர்மானங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டில் நான் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும், நிறைய முன்னேற்றம் காண வேண்டும். அதேநேரம், யாரையும் என்னால் வெல்ல முடியும் என்ற அதீத தன்னம்பிக்கையும் என் தலைக்குள் ஏறிவிடக் கூடாது. ஒரு குறிப்பிட்ட போட்டியில், குறிப்பிட்ட நாளில் யார் சிறப்பாக ஆடுகிறாரோ அவரே வெல்வார்’’ என்று சிந்து பேச்சில் நிதானம் காட்டுகிறார்.

ஆல் இங்கிலாந்து போட்டிக்கான இவரது திட்டம் குறித்துக் கேட்டால்...

‘‘நமக்கு தேசிய பேட்மிண்டன் போட்டி இருக்கிறது. அதற்கப்புறம் மார்ச்சில் ஆல் இங்கிலாந்து தொடர். அது ஒரு பெரிய போட்டி. அதில், நன்றாக ஆட முடியும் என்று எண்ணுகிறேன். அப்போட்டி அவ்வளவு எளிதாக இராது. அதில் நமது நூறு சதவீத திறனை வெளிப்படுத்தியாக வேண்டும். அதற்கப்புறம், ஒன்றிரண்டு சூப்பர் சீரிஸ் தொடர்கள் இருக்கின்றன. அடுத்து, ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராக வேண்டும். ஆக, இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் எங்களை ஆரோக்கியமாகவும், முழு உடல்தகுதியோடும் வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்கிறார்.

பேட்மிண்டன் வீராங்கனைகள் ஆண்டு முழுவதும் போட்டிகளில் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நன்றாக அறிவார்கள். ஆனால் அதனால் பெரிதாகப் பலனில்லை என்று சிந்து சொல் கிறார்...

‘‘இதனால் நன்மை மட்டும் உண்டு என்று கூறிவிட முடியாது. சாதகம், பாதகம் இரண்டும்தான் இருக்கின்றன. ஒரு வீராங்கனைக்கு எதிராக ஒரே வியூகத்தை திரும்பத் திரும்ப பயன்படுத்த இயலாது. அதே நேரம், குறிப்பிட்ட வீராங்கனையுடன் நாம் ஒன்றிரண்டு ஆட்டங்கள் ஆடியிருந்தால், அவருடன் எப்படி மோதலாம் என்று ஐடியா இருக்கும். அவருக்கு எதிராக ஒரு திட்டம் கைகொடுக்கவில்லை என்றால், இன்னொரு திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம். எல்லோருக்கும் எதிராகவும் ஒரே திட்டம் கைகொடுக்காது.’’

ஒருவர் நிறையப் போட்டிகளில் விளையாட விளையாட அவருக்கு இயல் பாகவே ஓர் அசிரத்தை உணர்வு வந்துவிடுமா என்ற கேள்விக்கு,

‘‘நாம் எப்போதுமே அசிரத்தையாக இல்லாமல் நம்மை நாமே ஊக்குவித்துக்கொண்டே இருக்க வேண்டும். காரணம், யாருக்கும், எப்போதும் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாம் சில போட்டிகளில் வெல்வோம், சில போட்டிகளில் தோற்போம். ஆனால் நாம் எப்போதும் வலுவாக இருக்க வேண்டும். தோல்விகளின்போது புரிந்த தவறுகளை அறிந்துகொண்டு மீண்டும் உறுதியாக எழ வேண்டும்’’ என்று சிந்து திடமாகத் தெரிவிக்கிறார்.

‘‘ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டி போன்றவை நடைபெறுவதால் இந்த ஆண்டு மிக முக்கியமான, அதேநேரம் நெருக்கடியான ஆண்டு. ஆனால் நான் சவால்களைச் சந்திக்க தயாராகவே உள்ளேன்!’’ என்று சந்தோஷமாகச் சொல்கிறார் சிந்து.