பத்திரிகை வாசிக்கற பழக்கத்தை மக்களிடையே அதிகரிக்கணும்.


செம்மொழி என்ற சிறப்பைப் பெற்றது நம் தமிழ் மொழி. பள்ளிப் பாடங்கள் தவிர, நாம் தமிழைப் பிற ஊடகங்கள் வழியாகவே அறிந்துகொள்கிறோம். மொழியைப் பரவலாக்கும் பணியை ஊடகங்கள் செய்கின்றன. ஊடகங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு உதவுகின்றனவா? என்ற தலைப்பில் மதுரை, பெருங்குடி, அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துரையாடினார்கள். மொழி வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு என்ன என்ற அவர்களது கருத்துகளை அறிந்துகொள்வோம்.

ச.திருமலைவாசன், 11ஆம் வகுப்பு
தமிழ் இன்னைக்கு எல்லா ஊடகத்திலயும் இருக்கு. உள்ளங்கையில் உலகம்னு சொல்றது போல மொபைல் போன்லகூட தமிழ் வந்தாச்சு. குறைஞ்ச படிப்பறிவு உள்ளவங்ககூட செய்தித்தாள் வாசிக்கறது மூலமா தமிழ் நல்லா கத்துக்கறாங்க. ஊடகங்கள் தமிழ் வளர்ச்சிக்கு உதவுதுங்கறதுதான் உண்மை.

பா.பிரவிண்குமார், 9ஆம் வகுப்பு
செய்தி, பத்திரிகை போன்றவை மூலமா தமிழ் எல்லா மக்களுக்கும் போய்ச்சேருது. செய்திகளைத் தெரிஞ்சுக்கறதோட தமிழையும் தெரிஞ்சுக்கறாங்க. உலகத்துல எங்கோ நடக்கற விஷயங்களையெல்லாம் தமிழ்ல படிச்சு தெரிஞ்சுக்க முடியுது. ஊடகங்களோட முக்கியமான பணி இதுதான்.

ப.கோகுல், 8ஆம் வகுப்பு
டி.வி. சானல்களில் பல மொழி கலப்பு அதிகமாயிடுச்சு. தமிழுக்கு குறைவாத்தான் முக்கியத்துவம் கொடுக்கறாங்க. தமிழைத் தெரிஞ்சுக்க ஊடகங்கள் நிறைய உதவுகின்றன. பொதிகை டி.வி.யில ழகரம்னு ஒரு நிகழ்ச்சிய நான் தொடர்ந்து பார்ப்பேன். பிற மொழி கலக்காம தமிழ்லயே நிகழ்ச்சிகளைப் போடணும். அப்பதான் மொழி வளர்ச்சிக்கு உதவும்.

மு.தனின், 8ஆம் வகுப்பு
தொடர்ந்து பத்திரிகை, புத்தகங்களை வாசிப்பதன் மூலமா நாம மொழியை நல்லா கத்துக்கறோம். புத்தக வாசிப்பு அவசியமானது. அதன் மூலமாத்தான் நாம மொழி வளர்ச்சி பெறமுடியும். அடுத்த தலைமுறைக்கு மொழிப்பற்றை ஏற்படுத்தணும். ஊடகங்கள் மூலமாதான் இது சாத்தியமாகும். 

மு.சந்தானலெட்சுமி, 12ஆம் வகுப்பு
எந்தத் தகவலையும் தாய்மொழியில தெரிஞ்சுக்கறப்ப நிறைய பேருக்குப் போய்ச் சேருது. அந்த வகையில எல்லா வகையான ஊடகங்களும் தமிழுக்கு முக்கியத்துவம் தர்றாங்க. ஊடகங்களைப் பயன்படுத்தறது மூலமா தமிழ் மொழிய அழியாம பாதுகாக்கலாம்.

சி.ஜூவானா மின்கா ஒபிலியா, 11ஆம் வகுப்பு
படிக்கத் தெரியாதவங்ககூட ரேடியோ, டி.வி. மூலமா மொழியைக் கேட்டுத் தெரிஞ்சுக்கறாங்க. தகவல் தொழில்நுட்பத்துல நிறைய வளர்ச்சிகள் வந்தாலும், அதுல தமிழைப் பயன்படுத்துறதுல நாம முன்னணியில இருக்கோம். ஊடகங்கள் தமிழ் வளர்ச்சிக்கு நிறைய உதவுகின்றன. பத்திரிகை வாசிக்கற பழக்கத்தை மக்களிடையே அதிகரிக்கணும்.