ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரிபட்டமளிப்பு விழா


ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன், கல்வி குழும செயலாளர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் எஸ்.சேகு ஜமாலுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆவடியில் செயல்படும் ஆலிம் முஹம்மது சாலிஹ் பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 480 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.

விழாவில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசும்போது, “மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயில சிறப்பான கல்லூரிகள் பெரிதும் பக்க பலமாக திகழ்கின்றன” என்றார்.

தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் பாண்டியராஜன் கவுரவ விருந்தின ராக கலந்துகொண்டார். அவர் உரையாற்றும்போது, “தமிழக அரசு உயர் கல்வியை தொலைநோக்கு பார்வையுடன் அடுத்த உயர் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இத்தரமான உயர்கல்வி 21-ம் நூற்றாண்டின் உயர் கல்விக்கு மாதிரியாக திகழ்கிறது” என்றார்.

ஆலிம் முஹம்மது சாலிஹ் கல்வி குழும செயலாளர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் எஸ்.சேகு ஜமாலுதீன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 405 இளநிலை பொறியியல், 28 பி.டெக்., 26 எம்.சி.ஏ., 21 எம்.பி.ஏ. மாணவர்கள் என மொத்தம் 480 பேர் பட்டங்களை பெற்றனர்.